(Source: Poll of Polls)
Villupuram: ’கொடி கம்பம் நட்டபோது உயிரிழந்த 13 வயது சிறுவன்’ 3 நாட்கள் ஆகியும் வாய் திறக்காத திமுக..!
பேனர் தவறி விழுந்து அதிமுக ஆட்சியில் சுபஸ்ரீ உயிரிழந்தபோது அறிக்கை, பேட்டி என கண்டனங்களை அடுக்கி காரணமானவர்களை கைது செய்யச் சொன்ன திமுக, இப்போது தினேஷ் உயிரிழப்பில் மவுனம் சாதித்து வருகிறது
தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்ற திருமண விழாவிற்கு திமுக கொடி கம்பம் கட்டும் பணியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை ஒரு இரங்கலோ, வருத்தமோ கூட திமுக தரப்பில் இருந்து வெளிவராதது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் – மாம்பலம்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்லத் திருமணம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் பேனர்களும், திமுக கொடிகளும் கட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதே கொடி கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹூம் லே அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான 13 வயதே ஆன, பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் தினேஷ் என்ற சிறுவனும் சட்ட விரோதமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளான்.
மின் பகிர்மான கழகத்தின் அருகே கொடி கம்பம் நட்டபோது, கொடி கம்பத்தின் இரும்பு கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, அதன்மூலம் சிறுவன் தினேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான். அருகே இருந்தவர்கள் தினேஷை மருத்துவமனை கொண்டு போய் சேர்த்தும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவன் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் திமுக சார்பில் இரங்கலோ வருத்தமோ தெரிவித்து ஒரு அறிக்கை கூட வெளியாகாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சாலையில் உள்ள பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தபோது கண்டனங்களையும் எதிர்ப்பையும் அறிக்கை மூலமாகவும், பேட்டி வாயிலாகவும் கொடுத்த திமுக, அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. ஆனால், இப்போது அதேபோன்ற ஒரு பேனர் சம்பவத்தில் 13 வயதே ஆன சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து 3 நாட்கள் ஆகியும் திமுக மவுனம் சாதித்து வருகின்றது.
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!
— M.K.Stalin (@mkstalin) September 12, 2019
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? https://t.co/nyNxhpGmkf
சுபஸ்ரீ உயிரிழந்தபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில் 'அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது’ என்று கேட்டு வேதனை தெரிவித்திருந்தார். அதன்பிறகு, பேனர்கள், கட் அவுட்கள் வைக்க வேண்டாம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை கொடுத்து கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை மீறி அமைச்சர்கள் செல்லும் பல்வேறு இடங்களிலும் பேனர்களும் கட்-அவுட்களும் தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன.
சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2019
காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் @chennaipolice_ காப்பாற்றுவது யாருக்காக? pic.twitter.com/PjDWPl1Xf0
முதல்வரின் அறிவுறுத்தலை மீறியும், முறையாக அனுமதி வாங்காமலும் கட்சி கொடி கம்பம் நடும் பணியில் சட்டவிரோதமாக 13 வயது சிறுவனை ஈடுபடுத்தியதால்தான் இப்போது அவனது உயிர் பறிபோயிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தபோது கொதித்து எழுந்து சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கண்டித்த திமுக, இப்போது திமுக ஆட்சியில், திமுக கொடி கம்பம் நடும்போது ஏற்பட்ட விபத்தால் 13 வயது சிறுவன் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இந்த சம்பவத்தில் இன்னும் ஒருவரும் கைது செய்யப்படாததும் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் திமுக கொடி கம்பம் நடும்போது உயிரிழ்ந்த இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
திமுக கொடி கம்பம் நட்ட 13 வயது சிறுவன் உயிரிழந்தது எப்படி..?