தாயை இழந்த ஆண் குழந்தைக்கு தாய்பால் ஊட்டி வரும் டாக்டரின் மனைவி..! வேலூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
வேலூர் அருகே தாயை இழந்த ஆண் குழந்தைக்கு கால்நடை மருத்துவரின் மனைவி தாய்ப்பால் கொடுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே உள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவிக்கு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த அன்றே தாய் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் தாய்ப்பாலும், தாயின் பாசமும் அந்த குழந்தைக்கு கிடைக்கவில்லை. மேலும், அந்த குழந்தை தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது.
அந்த விவசாயி தனது கால்நடைகளை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம். அப்போது அவரது மனைவி இறந்ததும், குழந்தை தாயின்றி வளர்ந்து வருவதும் கால்நடை மருத்துவர் ரவிசங்கருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், தனது 26 வயதான மனைவி சந்தியாவிடம் தெரிவித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சந்தியா, தாயின்றிவளரும் அந்த ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்புவதாக தனது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரது கணவரும் சம்மதம் தெரிவிக்கவே கடந்த 3 மாதமாக வாரம் ஒருமுறை காட்பாடியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்திற்கு பயணம் செய்து அந்த குழந்தைக்கு சந்தியா தாய்ப்பால் ஊட்டி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நினைத்தேன். என்னை பொறுத்தவரையில் தாய்ப் பால் தானம் தான் சிறந்த தானமாகும்.
ஏராளமான குழந்தைகள் தாய்ப்பால் இன்றி வளர்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன் வரவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்பட வேண்டும். எனவே நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க : மூதாட்டியை கொலை வழக்கில் உதவிய நாய்: பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த காவல்துறை
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்