Thirumavalavan Arrest: ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; வி.சி.க. தலைவர் திருமாவளவன் கைது
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற அமைதிப்பூங்கா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி, காமராஜர் ஆகியோரது பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்ததுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பாதியிலே அவர் வெளியேறியதும் தமிழ்நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று ஏற்கனவே வி.சி.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சின்னமலை அருகே இன்று ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் வி.சி.க.வினர் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். அவருடன் மற்ற தலைவர்களும், வி.சி.க. நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.





















