சென்னை டூ கன்னியாகுமரி.. எல்லாமே மாறப்போகுது.. தமிழக மக்களுக்கு குஷி!
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக 73.13 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக 73.13 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை டூ கன்னியாகுமரி:
தமிழக கடலோரப் பகுதிகளின் மேம்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் பதில் அளித்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக 73.13 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொடர் ஜாக்பாட்:
ஏற்கனவே, பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, மகாபலிபுரத்தில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய சிரபுஞ்சியாக விளங்கும் நீலகிரியின் தேவாலாவில் மலர் தோட்டம் அமைக்க 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்