Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயநிதி
திமுக பூத் முகவர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுக ஆட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கூட்டத்தில் அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.

திருவண்ணாமலையில், திமுக வடக்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார். கூட்டத்தில் அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்“
பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் திமுக வெற்றி பெறும் என்றும், அடுத்த 8 மாதங்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் இருப்பதாகவும் கூறினார். பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாமல் இருக்கும் நிலையில், திமுக டிஜிட்டல் முகவர்களை அமைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று உறுதிபடக் கூறினார்.
“பாஜக பாசிச மாடல், அதிமுக அடிமை மாடல்“
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு அரசு ஒவ்வொரு தன்மை கொண்டது என்றும், பாஜக அரசு என்றால் பாசிச மாடல் என்றும் அதிமுக அரசு என்றால் அடிமை மாடல் என்று கூறுவார்கள் எனவும் விமர்சித்தார்.
“எடப்பாடி பழனிசாமி இப்போது காவி சாமி“
இந்நிலையில், நாம் பெருமையாக திராவிட மாடல் எனக் கூறுகிறோம் என பூத் முகர்வர்களிடம் தெரிவித்தார். மேலும், அதற்கு ஏற்றாற்போல் அனைத்து மக்களுக்குமான திட்டங்களை நடைமுறைப்படுததி வருவதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், எடப்பா பழனிசாமி தற்போது காவி சாமி ஆகிவிட்டதாகவும் சாடினார்.
மேலும், அண்ணா பெயரில் நடத்தப்படும் கட்சியை, சுயநலத்திற்காக அமித் ஷாவிடம் மொத்தமா அவர் அடமானம் வைத்துவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார். அதோடு, வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி டெப்பாசிட்டை இழக்கும் எனவும் அவர் கூறினார்.
“திமுக அரசால் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது“
திமுக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், 730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் கல்வி பயில மாதம்தோறும் வழங்கப்படும் 1000 ரூபாய் மூலம் 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகையை கடந்த 22 மாதங்களாக 1.15 கோடி மகளிர் பெற்று வருவதாகவும், விடுபட்ட தகுதியான மகளிருக்கு, இன்னும் இரண்டு மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இத்தகைய திட்டங்களை கொடுத்துவரும் திமுக அரசாலேயே, தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.





















