Kalaignar 100: “பூவாய் காற்றாய் மழையாய் இயங்கிய தலைவா” - கருணாநிதியை புகழ்ந்த உதயநிதி, வைரமுத்து, கமல்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கருணாநிதியின் பேரனும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம். எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, ‘ஓய்வெடுக்காமல் உழைத்த’ கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார். இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும். கலைஞர் வாழ்க...அவர் புகழ் ஓங்குக!” என தெரிவித்துள்ளார்.
அன்பியல் உச்சரிப்பு
— ThangaTamilSelvan (@ThangaTamilselv) June 3, 2024
அழகியல் உபசரிப்பு!
அறிவியல் பரிசளிப்பு
அறவியல் பரிணமைப்பு!
அரசியல் பங்களிப்பு
அனைத்தும் பகிர்ந்தளிப்பு!
அதிகாரம் அன்பளிப்பு
ஐயா கலைஞர் ஆட்சியளிப்பு!
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!#Kalaingar100 #Kalaingar101 pic.twitter.com/GUqmr4yIcx
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், “ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் எடுத்த காரியம் முடிக்காது விடாத நேர்மறைப் பிடிவாதமும் படைத்த மாபெரும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் இன்று. அவரது நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில், கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன்:” என சமூக வலைத்தளம் பக்கம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு பூ மலர்வது தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப காற்று கைவீசித் திரிவது தன் இருப்பை இனங்காட்டவல்ல; நாசிகளுக்கெல்லாம் சுவாசம் பரிமாற மழைத்துளி தரையிறங்குவது இடிகளின் துரத்தலுக்கு அஞ்சியல்ல; பசித்த வேர்களின் திரவ உணவுக்காக பூவாய் காற்றாய் மழையாய் இனம் மொழி மீது இயங்கிய தலைவா உன் நூற்றாண்டை எடுத்துப் பல நூற்றாண்டுகள் உடுத்துக் கொள்ளும்” என கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.