Udayachandran IAS : டி.என்.பி.எஸ்.சி. யை உதயச்சந்திரன் கிளீன் செய்தது எப்படி தெரியுமா?
Udayachandran IAS : முக்கியத்துவமில்லாத டம்மி பதவி என்றுதான் 2011 ஜூன் 25 அன்று உதயச்சந்திரனை டிஎன்பிஎஸ்சி செயலாளராக உட்காரவைத்தார்கள். ஆனால், முதல் முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு, போட்டித்தேர்வுகள் மீது தீராத ஆர்வம்!
முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், பல்வேறு துறைகள், பதவிகளில் பணியாற்றி இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி- அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணி ஒரு நட்சத்திர முத்திரை என்று கூறலாம்.
கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எப்போதும் சோதனைகள் அதிகம். அப்படித்தான், அரசுப் பணியாளர் தேர்வாணையம்- டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதவியிலிருந்து, 2012 அக்டோபர் 22 அன்று நீலகிரி மாவட்டம் குன்னூர், இண்ட்கோசெர்வ் தேயிலைக் கூட்டுறவு நிறுவனத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். மீண்டும் அவர் மலையிலிருந்து கீழே இறங்க, அடுத்த ஆண்டு ஜூன் ஆகிவிட்டது. சிறு குழந்தை, சென்னையில் குடும்பம் இருக்க, நீலகிரிக்கும் சென்னைக்குமாக அலையவைக்கப்பட்டார்.
அப்படி என்னதான் செய்துவிட்டார், டிஎன்பிஎஸ்சியில்?
முக்கியத்துவமில்லாத டம்மி பதவி என்றுதான் 2011 ஜூன் 25 அன்று உதயச்சந்திரனை டிஎன்பிஎஸ்சி செயலாளராக உட்காரவைத்தார்கள். ஆனால், முதல் முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு, போட்டித்தேர்வுகள் மீது தீராத ஆர்வம்!
ஒரு மாதம் என்னென்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தார். அவரை ஓரங்கட்டிவிட்டதாக நினைத்தவர்களுக்கு ஆள் அடங்கிவிட்டார் என உள்ளுக்குள் மகிழ்ச்சி. ஆனால், அது ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை.
அரசு வேலைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி, நீண்ட காலத்துக்குப் பிறகு 10 ஆயிரம் கிராம நிர்வாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டார்கள். உதவி பல் மருத்துவர்கள், உதவிப் பொறியாளர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என வரிசையாக போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. புகார்களும் வரிசைகட்டி வந்தன.
தன் வேலையைத் தொடங்கினார், உதயச்சந்திரன். இளநிலை எழுத்தருக்கான 4ஆம் தொகுதி மற்றும் துணைகலெக்டர், டிஎஸ்பி ஆகிய பணிகளுக்கான முதல் தொகுதி தேர்வுகள் தொடர்பாக அதிக புகார்கள் வந்தன.
கேள்வித்தாளை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிடுவது, தேர்வில் எழுதாமல், ஆளைவைத்து எழுதி விடைத்தாளைச் செருகுவது, திருத்தும் இடத்தில் கையூட்டு தருவது என பலவகை மோசடிகள் அரங்கேறியபடி இருந்தன.
வினாத்தாள் வெளியாகாதபடி சீல் வைத்து, திறக்கும்போதும் அப்படியே இருப்பதை உறுதிப்படுத்தும் முறையைக் கொண்டுவந்தார், உதயச்சந்திரன். விடைத்தாள் திருத்தும் பணியில் தில்லுமுல்லு செய்ததை, தொழில்நுட்பரீதியாகக் கண்டுபிடித்து, அதை முற்றிலுமாகத் தடுக்கும்படி தொழில்நுட்பத்தைப் புகுத்தினார்.
மற்ற பல மாநிலங்களின் போட்டித்தேர்வு முறைகளை ஆராய்ந்து, அதில் உரியவற்றை இங்கு நடைமுறைப்படுத்தினார். அவருடைய பேட்ச் வெளிமாநில ஐஏஎஸ் பயிற்சி நண்பர்களின் உதவியும் கைகொடுத்தது.
துணை கலெக்டர், டிஎஸ்பி போன்ற பணிகளுக்கான முதல் தொகுதி தேர்வில், நேர்காணலில் சித்துவேலைகள் மூலம் உரியவர்களை தேர்ச்சிபெறவிடாமல் மோசடி செய்துவந்தார்கள். ஒருவரின் மதிப்பெண்ணை மாற்றி இன்னொருவருக்குப் போட்டதும் நடந்திருக்கிறது. அதில் அவர் கைவைத்தபோது பிரச்னை வெடித்தது.
நேர்காணலில் குறிப்பிட்ட அளவுக்கு குறைவாகவோ குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ மதிப்பெண் தரக்கூடாது; நேர்முகத் தேர்வை வீடியோ எடுக்கவேண்டும் என புதிய முறைகளை முன்வைத்தார். கையூட்டுவாங்கி யாருக்கும் சாதகமாக மதிப்பெண் போடமுடியாதபடி நெருக்கினார். முடிவை வெளியிடும் முன்னர் தேர்வுத்தாள்களைத் தன்னிடம் காண்பிக்கவேண்டும் என்றும் கறார்காட்டினார். தேள் கொட்டியதைப் போல திடுக்கிட்டார்கள், மோசடி செய்து பழக்கப்பட்டவர்கள்.
2011 ஜூலை 13ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் செல்லமுத்து, மொத்த 13 உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. செயலாளருக்கு ஆணையத்தில் உள்ளவர்கள் அலுவல்ரீதியாக பதிலளிக்கக்கூடாது என ஆணையாக வெளியிட்டனர். விவகாரம், வெடித்தது.
தனக்கு வந்த புகார்களை அப்படியே தலைமைச்செயலாளருக்கு அனுப்பி, மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து, செல்லமுத்து மற்றும் உறுப்பினர்களின் இடங்களில் தேடுதல்சோதனை நடத்தினர். அதில் 800 ஆவணங்களுக்கும் மேல் கைப்பற்றப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் நிதிநிறுவனம் ஒன்றின் லாக்கரில் ரவி எனும் உறுப்பினர் வைத்திருந்த 180 சரவன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில் இன்னொரு உறுப்பினர் ராஜா என்பவர் வீட்டில், 28 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பலரின் வீடுகளில் முத்திரை இல்லாத நியமனப் பட்டியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
21 மாவட்டங்களில் மோசடியில் பங்குகொண்ட 53 போட்டித்தேர்வர்களின் இடங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. பலரும் லட்சக்கணக்கில் தந்த லஞ்ச விவரத்தை கொட்டினார்கள்.
தேர்வாணையத்தின் கணினி சர்வரானது, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் சி-டாக் மைய வல்லுநர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது.
செல்லமுத்துவும் அவரின் கோஷ்டியும் அடுத்த கட்ட தற்காப்பில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தங்களை விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கூறி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.
ஆனால், முந்தைய ஆட்சியில் இருந்த முறையை மாற்றி, புதிய நடைமுறை வந்ததே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த அழகில்தான் இருந்தது, அவர்களின் ஆளுமைத்திறன்!
லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அப்போது இருந்த முகமது இக்பால் எனும் அதிகாரியும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். வேறு வழி இல்லாமல் கடைசியில் 2012 பொங்கலுக்கு முன்னர் ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய ஆளுநர் ரோசய்யாவிடம், விலகல் கடிதத்தைக் கொடுத்தார், செல்லமுத்து.
மோசடிகளைத் தடுக்க முயன்றது மட்டுமின்றி, தேர்வு முறைகளை எளிமையாகவும் இணையவழியில் நவீனமாகவும் மாற்றினார், உதயச்சந்திரன். காலத்துக்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைத்ததிலும் அவரின் பங்கு முதன்மையானது. செல்லமுத்துவுக்கு அடுத்து தலைவராக வந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ், ’தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று பாராட்டினார். ஆனாலும் சீக்கிரமே நீலகிரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார், உதயச்சந்திரன்.