பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் பயம் இல்லை: அதிரடியாக தொடங்கிய தவெக தலைவர் விஜய்
பாம்பா இருந்தாலும் பயம் இல்லை; அரசியலா இருந்தாலும் பயம் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம் பற்றி விளக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் “ஒரு குழந்தை முதன் முதலில் அம்மா என்று சொல்லும்போது அந்த அம்மாவுக்கு சிலிர்ப்பு வரும். ஆனால் அந்த சிலிர்ப்பு எப்படி இருக்கும் என அந்த குழந்தைக்கு சொல்ல தெரியாது. சிரிக்க மட்டுமே தெரியும். அதேமாதிரி எதிரில் ஒரு பாம்பு வந்தால் சிரித்துக்கொண்டே அந்த பாம்பை பிடித்து விளையாடும்.
இங்கு பாம்பு என்பது அரசியல். நாம்தான் குழந்தை. அரசியலுக்கு நாம் எப்போதும் குழந்தைதான். ஆனால் பாம்பா இருந்தாலும் சரி, பாலிடிக்ஸா இருந்தாலும் சரி. இந்த குழந்தைக்கு பயம் இல்லை.
பெரியார் எங்கள் கொள்கை தலைவர். இருந்தாலும் பெரியாரின் கடவுள் மறுப்பில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அண்ணா சொன்ன மாதிரி ஒன்றே குலம், ஒருவனே தலைவன் என்பதே எங்கள் நிலைப்பாடு. பெரியாருக்கு அடுத்து பச்சைத்தமிழர் காமராஜர் எங்கள் கொள்கை தலைவர். வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாளும் எங்கள் கொள்கை தலைவர்கள்.
நம்மை பார்த்து யாரும் விசில் அடிச்சான் குஞ்சு என்று யாரும் அழைத்துவிடக்கூடாது. நம்ம பார்த்து வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்று எல்லோரும் கூற வேண்டும். கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவதில் தவெக தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமோ அதை நிச்சயம் செய்து முடிப்போம். அதுவரை நெருப்பாக இருப்போம். நமக்கு இவ்வளவு கொடுத்த மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்று யோசித்தபோதுதான் அரசியல் என்ற விடை கிடைத்தது.
நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்தபோது பூதம் வருவது போல் பல கேள்விகள் வந்தன. எதை பற்றியும் யோசிக்காமல் இறங்கி அடித்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது” எனத் தெரிவித்தார்.