இனி 40 இடங்களுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்; தமிழக அரசு அசத்தல் அறிமுகம்!- முன்பதிவு செய்வது எப்படி?
தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் (TREK TAMIL NADU) மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. துணை முதல்வர் உதயநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
மலையேற்ற வழிகாட்டிகளாகக் காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று தெரிவித்து உள்ளதாவது:
''தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக https://www.trektamilnadu.com/ என்ற பிரத்யேக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
40 மலையேற்றப் பாதைகள்
இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படும் வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், பதினெட்டு வனவிலங்கு சரணாலயங்கள், பதினேழு பறவை சரணாலயங்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு காப்பகங்களை கொண்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ட்ரெக்கிங் வழிகாட்டிகள் யார்?
மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் சூடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் காப்பீடு
மேலும், இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும்.
முன்பதிவு செய்வது எப்படி?
பொது மக்களுக்கு முன்பதிவு மற்றும் இவளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள https://www.trektamilnadu.com/ பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக செய்ய உதவும் வகையில் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 30 அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.
யாருக்கெல்லாம் அனுமதி?
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 1௦ வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.