Chennai Traffic: சென்னைவாசிகளே.. அடுத்த 3 மாசம் போக்குவரத்து மாற்றம்.. ஒருவழிப்பாதையான முக்கிய இடம்!
சென்னையில் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே முக்கிய வழித்தடங்களில் பல முறை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுவதால் முக்கிய வழித்தடத்தில் இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கோட்டை அருகே ரிசர்வ் வங்கி தலைமையகம் வாயிலில் உள்ள சுரங்க பாதை ரயில்வே பாலத்தில் 4வது ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஏப்ரல் 26) முதல் அடுத்த 3 மாதத்திற்கு இரவு 10 மணி முதல் ஒருவழி பாதையாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Traffic #Diversion near RBI Subway:#SouthernRailways @GMSRailway has proposed to lay 4th railway track on RBI subway bridge and carry out RCC box construction work due to which the following traffic diversion will be implemented from 26.04.2024, 22.00hrs for 3 months. pic.twitter.com/c8ii3yLb9e
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) April 26, 2024
இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக போர் நினைவிடம் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக சுரங்க பாதை அணுகுசாலை வழியாக வடக்கு கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி பாலம், வாலஜா பாயிண்ட், கொடி மர சாலை, போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பாரிமுனை நோக்கி காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதை எப்போதும் போக்குவரத்து நிறைந்த இடமாகும். மேலும் தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள் என பல முக்கிய துறைகளும் அந்த பகுதியில் தான் செயல்பட்டு வருகின்றது.
ஒத்துழைப்பு வழங்கும் பொதுமக்கள்
முன்னதாக பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் ரெட்டேரி, சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட் என பல வழிகளில் சென்னையில் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே முக்கிய வழித்தடங்களில் பல முறை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு சிரமம் இருந்தாலும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் பெருமளவு பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.