Valli Kummi: புத்துயிர் பெற்ற வள்ளி கும்மி.. மன அழுத்தத்தை குறைக்கிறதா? பெண்கள் சொல்வது என்ன?
Valli Kummi: பாரம்பரிய வள்ளி கும்மியின் மூலம் மன அழுத்தம் குறைவதாகவும், மேம்பட்ட மன நல்வாழ்வை அதன் மூலம் கண்டறிய முடிவதாகவும் கூறப்படுகிறது.

Valli Kummi: பாரம்பரிய வள்ளி கும்மியின் மூலம் மன அழுத்தம் குறைவதாகவும், மேம்பட்ட மன நல்வாழ்வை அதன் மூலம் கண்டறிய முடிவதாகவும் கூறப்படுகிறது.
புத்துயிர் பெற்ற வள்ளி கும்மி:
தமிழ்ச் சமூகம் ஒரு காலத்தில் தெருக்கூத்து, நாடகம் போன்று கும்மியையும் தங்களது பொழுது போக்கு அங்கங்களில் ஒன்றாக கொண்டாடி வந்தனர். அதாவது கடவுள் முருகப்பெருமான் மற்றும் அவரது மனைவி வள்ளி இவர்களது பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கையை பாடி கும்மி ஆடுவது தான் வள்ளி கும்மி என்று சொல்லப்படுகிறது. இப்படி ஆடப்பட்ட வள்ளி கும்மி ஒரு காலகட்டத்தில் கோவில் விழாக்களில் இருந்தே வெளியேற்றப்பட்டது. ஆனால் இது கடந்த சில வருடங்களாக மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது:
இச்சூழலில் தான் மன அழுத்ததில் போராடி வந்த என்னை மீட்டுக்கொண்டு வந்தது வள்ளி கும்மி தான் என்று திருப்பூரைச் சேர்ந்த எஸ்.சுகன்யா என்ற பெண் ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”மன அழுத்தத்தால் போராடி வந்த என்னை மருத்துவமோ அல்லது சிகிச்சையோ மீட்டு கொண்டு வரவில்லை ஆனால் வள்ளி கும்மி அதை செய்தது. ஒரு கோயில் திருவிழாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு நான் அதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இது என் உடற்தகுதியை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மன நலனை மீண்டும் பெறவும் உதவியது. நடனம் உங்கள் மனதை முழுமையாக ஒருமுகப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது:
தொடர்ர்ந்து பேசிய அவர், “வண்ணமயமான உடைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிகழ்த்தப்படும் வள்ளி கும்மி, கால் அசைவு, தாள கைதட்டல் மற்றும் பம்பை (டிரம்) போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் தாளங்களுக்கு ஏற்ப கதைசொல்லல் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. நிகழ்ச்சியின் போது தாள ஒலி மனதை ஒருநிலை படுத்துகிறது” என்றார். கோயம்புத்தூரில் உள்ள குனியமுத்தூரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளரான கே. சுகந்தி, "விவசாயிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் மக்கள் கூட எங்கள் குழுக்களில் ஒரு பகுதியாக உள்ளனர். இதில் நாங்கள் பயிற்சி அளிப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது புதிய நபர்களைச் சந்திக்கவும் உதவுகிறது”என்று கூறியுள்ளார்.
அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சிலர் படத்தில் ‘பச்சிகளாம் பறவைகளாம்’ என்ற பாடலை எழுதிய நவீன் கூறுகையில்,” முன்னர், போரில் வெற்றியைக் கொண்டாட இந்த நடனம் நிகழ்த்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது அறுவடைக்குப் பிறகு விவசாயிகளும் இதை நிகழ்த்தினர். ஒரு நிகழ்ச்சியின் போது, பக்தி வசனங்கள் மற்றும் அவற்றின் அர்த்தத்தை விளக்குவதன் மூலம் நாங்கள் தொடங்குகிறோம். வள்ளி தேவி மற்றும் முருகனுடனான அவரது திருமணம் பற்றிய பாரம்பரியக் கதைகளையும் நாங்கள் கூறுகிறோம்” என்று வள்ளி கும்மியின் பெருமைகளை கூறியுள்ளார். அதே நேரம் வள்ளி கும்மி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான அடையாளமாக இருப்பதாகவும் சாதியை அடுத்த தலைமுறைக்க பரப்ப இது பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.






















