Minister Ponmudi: பொன்முடிக்கு சிறை? அமைச்சர் பதவி தப்புமா? சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தண்டனையை அறிவிக்கும் உயர்நீதிமன்றம்
Minister Ponmudi Case: தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.
Minister Ponmudi: தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை?
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை, விசாரித்த சென்னை நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என கடந்த 19ம் தேதி அறிவித்தது. வருமானத்திற்கு அதிகமாக 60.49% அதாவது ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதால், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (21ம் தேதி) காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் நேரில் அல்லது காணொலி காட்சி மூலம் ஆஜராகவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது துறை வேறு அமைச்சருக்கு அல்லது புதிய அமைச்சருக்கு வழங்கப்படும். அதேநேரம், அவர் உச்சநீதிமன்றத்தை நாடாவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் விவரம்:
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
உயர்நீதிமன்றம் தலையீடு:
பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு நாளன்று அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் நேரில் ஆஜரானார்கள். அப்போது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இருவரையும் விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2017 ஆம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 19 ஆம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ததோடு இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அமைச்சர் உச்சநீதிமன்றம் செல்ல அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் தான், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சச்ர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்படார். இதையடுத்து, அவரது காரில் இருந்த தேசியக் கொடி ஏற்கனவே அகற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.