TN urban Local body Elections 2022 | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யார் வேலை செய்யவேண்டும் என தீர்மானிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் யாரை பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்தத் தேர்தல் பணிகளில் ஊரக பகுதி அரசு அலுவலர்களை, தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்று அதிமுக சட்டப்பிரிவு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வழக்கு ஒன்று தொடர்ப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது" என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற வழக்கை தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க உள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்பின்னர் திமுக இன்று தன்னுடைய 6ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் பாஜக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வெளியானது திமுகவின் 6வது வேட்பாளர் பட்டியல்... அப்படியே முழு விபரம் உள்ளே!