TN Local Body Election: 'உள்ளாட்சித் தேர்தல்’ தனித்து போட்டியிட பாஜக திட்டம்..?
தமிழ்நாட்டில் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தனித்து நின்று ஒரு மாநகராட்சி மற்றும் 10 நகராட்சிகளை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தலானது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக 2019ஆம் ஆண்டில் ஊரக பகுதிகளில் மட்டும் நடைபெற்றது. இருப்பினும் தமிழகத்தில் புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு எல்லைகள் முழுமையாக வரையறுக்கப்படாததால், இந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலானது நடத்தப்படவில்லை. எனவே வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலும், விடுபட்டுபோன 9 மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
கூட்டணி குறித்த கேள்வி... பேட்டியை முடித்த அண்ணாமலை...
இந்த நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, வார்த்தை போர் அரசியலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேதான் போட்டி இருக்கிறது, அதிமுக கூட்டணி தற்போது நன்றாக உள்ளது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான யூகங்கள் குறித்து தற்போது பதிலளிக்க முடியாது என கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.
உள்ளாட்சித் தேர்தல் என்பது தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக இடையேதான் பலத்த போட்டி இருக்கும் நிலையில் தேசிய கட்சியான பாஜகவை பொருத்தவரை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தென்மாநிலங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு கொடுத்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக
குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட தென்மாநிலங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பாஜகவிற்கு உறுப்பினர்களை கொண்டு வருவதன் மூலம் மாநில அளவில் கட்சியை வலுப்படுத்த முடியும் என பாஜக நம்புகிறது.
பட்டிதொட்டியெங்கும் தாமரை சின்னத்தை வரைந்து மக்கள் மத்தியில் சின்னத்தை கொண்டு செல்வது தொடங்கி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்னைகளை கையில் எடுத்து விவாதப்பொருளாக்குவது, தேசியத் தலைவர்களான அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைகளுக்கு அழைப்பது, மற்ற கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை பாஜகவிற்கு கொண்டு வந்து போட்டியிட வைப்பது உள்ளிட்ட யுக்திகளை பல்வேறு மாநிலங்களில் பாஜக செயல்படுத்தி வருகிறது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலுக்கு வந்த அமித்ஷா
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தெலங்கானாவில் ஹைதராபாத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலானது தேசிய அளவில் பேசுபொருளானது. மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜக அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. தேசிய கட்சித் தலைவர்களை பொருத்தவரை மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமே பரப்புரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பர். இடைத்தேர்தல் பரப்புரைக்கு கூட தேசியத் தலைவர்கள் முக்கியத்துவம் தரமாட்டார்கள் ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
ஹைதராபாத் பெயர் மாற்றத்தை கையிலெடுத்த பாஜக
தமிழ்நாட்டில் தற்போது கொங்குநாடு விவகாரத்தை கையிலெடுத்ததுள்ளது போலவே ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமிய பெயரான ஹைதராபாத் நகரை பாக்கிய நகர் என மாற்ற வேண்டும் என்ற விவாதத்தையும் பாஜக கிளப்பியது. இருப்பினும் இந்த வியூகம் பாஜகவிற்கு முழு பலனை தரவில்லை என்றாலும் ஹைதரபாத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, அசாதுதீன் ஓவைசி கட்சிக்கு அடுத்த கட்சியாக பாஜக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பெரிதும் கைகொடுத்தது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பாஜக
இதே போன்று கடந்த ஜனவரி மாதத்தில் கேரளாவில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்னோட்டமாகவே எல்லா கட்சிகளும் அணுகின. இருப்பினும் ஆளும் இடது முன்னணியும் காங்கிரஸும் மட்டுமே அதிக இடங்களில் வென்றன.
ஊராட்சி வார்டுகளில் சில இடங்களில் பாஜக வென்றிருந்தாலும், ஒரு மாநகராட்சியை கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. கேரளாவில் இந்த முடிவை முன்கூட்டியே கணித்திருந்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை தேசியத் தலைவர்கள் யாரும் கேரளாவிற்கு கொடுக்கவில்லை என கூறப்பட்டது.
கோவை மாநகராட்சியும் கொங்குநாடு விவகாரமும்
இந்த நிலையில் டிசம்பருக்குள் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு மாநகராட்சி மற்றும் 10 நகராட்சிகளை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக காய் நகர்த்தி வருகிறது. பாஜகவின் இந்த திட்டத்தில் கோவை மாநகராட்சி இருக்கும் என தெரிகிறது. இதன் எதிரொலியாகவே கொங்குநாடு விவகாரம் தற்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
பட்டிதொட்டி எங்கும் தாமரை சின்னத்தை வரைந்து மக்கள் மத்தியில் பதிய வைக்கவும், வார்டுகள் வரை பாஜக வளர்ந்து விட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் பாஜக உள்ளாட்சித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
உ.பி தேர்தல் வியூகத்தை உடன்பிறப்புகள் சமாளிப்பார்களா?
இறுதியாக கடந்த மாதம் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள நேரடி தேர்தல் நடைபெற்ற 3052 வார்டு உறுப்பினர் இடங்களில் வெறும் 603 இடங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலில், சுயேச்சைகளையும் வேறு கட்சியில் வென்றவர்களையும் வளைத்து மொத்தமுள்ள 75 மாவட்ட தலைவர் பதவிகளில் 67 இடங்களை கைப்பற்றியது.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மேயர், நகராட்சி தலைவர்கள் மறைமுகத் தேர்தல்கள் வாயிலாகவே தேர்வு செய்யும் வகையில் உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதனை வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மாற்றி மேயரையும், நகராட்சி தலைவரையும் நேரடியாக மக்களே தேர்வு செய்யும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை திமுக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுகவிற்கு அடுத்து பாஜக உள்ளது என்பதை நிலைநிறுத்தும் திட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஒரு வாய்ப்பாக எதிர்நோக்கி உள்ளது தமிழ்நாடு பாஜக.