(Source: ECI/ABP News/ABP Majha)
TN Local Body Election | 'எங்களால் முடியும்’ : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 40 மாற்றுத்திறனாளிகள்..
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் 40 மாற்றுத்திறனாளிகள் போட்டியிட உள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி, நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்து 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ். பா.ஜ.க., ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு அமைப்புகளும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பான டிசம்பர் 3 இயக்கமும் போட்டியிடுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 3 மாற்றுத்திறனாளிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1 மாற்றுத்திறனாளி, வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 24 மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 1 மாற்றுத்திறனாளியும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒரு மாற்றுத்திறனாளியும் போட்டியிடுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 1 மாற்றுத்திறனாளியும் போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு மாற்றுத்திறனாளியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1 மாற்றுத்திறனாளியும், திருப்பத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடுகின்றனர்.
9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக இயங்கி வரும் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுகின்றனர். இதுதொடர்பாக டிசம்பர் 3 மக்கள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மாற்றுத்திறனாளிகளின் குரலும் அரசியல் பிரகடனத்தின் தொடர்ச்சியாக மக்களுக்கு சேவை செய்ய வருகிறோம். வாய்ப்பு கிடைத்ததால்தான் தங்கவேலு மாரியப்பனால் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வெல்ல முடிந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவராக பேராசிரியர் தீபக் நாதனும், பொதுச்செயலாளராக அண்ணாமலையும் பொறுப்பு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.