TN Government: ஆளுநரின் தேர்வுக்குழுவை தூக்கிய தமிழ்நாடு அரசு.. சென்னை பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய குழு..!
துணைவேந்தர் தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிடப்ஆ
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிட்டுள்ளது.
ஆளுநர் அமைத்த தனி குழு:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கௌரி அண்மையில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வுக் குழுவின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தனியாக ஒரு அமைத்து அறிவித்தார். இந்த குழுவை ஏற்கபோவதில்லை என தமிழக அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் அவ்வப்போது மிகவும் பரபரப்பான விஷயமாக இருப்பது ஆளும் திமுகவிற்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல்தான். 2021ஆம் ஆண்டு திமுக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஆர்.என். ரவி. இவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே திமுக அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. இதனால், திமுகவிற்கும் ஆளுநர் ரவிக்கும் புகைச்சல் கிளம்பியது.
ஆளுநர் vs தி.மு.க அரசு:
திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிக்கொடுத்த பல மசோதாக்களை ஆளுநர் இன்னும் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். சமீபத்தில் இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவரின் தந்தை, எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள் என்ற கேள்விக்கு, எப்போதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என பதில் அளித்திருந்தார்.
இதற்கு முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவிற்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் இருந்ததற்கு திமுக மட்டும் இல்லாது, எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பலரும் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் இறுதியில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு வந்த பின்னர்தான் ஒப்புதலும் அளித்தார் ஆளுநர்.
துணைவேந்தர் நியமனம்:
ஏற்கனவே ஆளுநர் வசம் சில முக்கிய மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர்தான் வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலைவையில் வைத்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் ரவி சென்னை பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்விற்கு தேடுதல் குழுவை கடந்த 6ஆம் தேதி அமைத்தார். இந்த குழுவை ஏற்கபோவதில்லை என தமிழ்நாடு அரசு அப்போதே அறிவித்தது.
புதிய குழு:
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்து அரசிதழில் அறிவித்துள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றியவருமான ஜெகதீசன் ஆகிய இருவர் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் நியமித்த யு.ஜி.சி பிரதிநிதியை நிராகரித்து தமிழ்நாடு அரசு அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழுவை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.