CM Stalin: ”ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்” - ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

CM Stalin: ஆணவக் கொலைகளை தடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
”ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்”
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும் எனவும், அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும். ஆணவப்படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”சாதி மட்டுமே காரணம் அல்ல”
ஆணவக் கொலைகளை தடுப்பது குறித்து சட்டப்பேரவையில் நேற்று, பல்வேறு உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆணவக் கொலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணமால்ல. இன்னும் சில காரணங்களும் உள்ளன. உலகம் அறிவுமயமாகிறது. ஆனால் அன்பு மயமாவதை தடுக்கிறது. நாகரீக சமுதாயத்தின் அடையாளம் பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல. சமூக சீர்திருத்த சிந்தனை கொண்டதும் ஆகும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்” என வலியுறுத்தினார்.
”முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
தொடர்ந்து பேசுகையில், “அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட - சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது.
”ஆணாதிக்கமும் காரணம்”
அவ்வப்போது ஏதேனும் ஒருபகுதியில் நிகழ்ந்துவிடும் துயர சம்பவம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. சமுதாயத்தை தலைகுனிய செய்து விடுகிறது. பெண்கள் தங்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை பறிக்கும் ஆணாதிக்கமும் இந்த குற்றச்செயல்களுக்கு பின் ஒளிந்திருக்கிறது. எதன் பொருட்டு நடந்தெல்லாம் கொலை கொலை தான். ஆணவக் கொலைகள் நடக்கும்போதெல்லாம் கடுமையான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. யாரும், எவரும், எதன் பொருட்டும் செய்த குற்றத்திலிருந்து தப்பிவிடக்கூடாது என்பதை காவல்துறைக்கு உத்தரவாக போட்டுள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.





















