TN Budget 2024: ”மாபெரும் தமிழ்க் கனவு” 7 மெகா திட்டங்களுக்கு முக்கியத்துவம் - எதிர்பார்ப்பை எகிற வைத்த தமிழ்நாடு பட்ஜெட்!
'மாபெரும் 7 தமிழ்க் கனவு' என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Budget 2024: மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 14ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19ம் தேதி (நாளை) தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள் காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். இத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
இதற்கிடையே தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி’ என்ற வாசகத்துடன் 2024-2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை என்பது இந்த முத்திரை சின்னத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறும் 7 சிறப்பம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
'மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமூக நிதி, கடைக்கோடி மனிதருக்கு நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்டவைகள் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 சிறப்பம்சங்கள்:
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மேம்படுத்திவிடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களை மேம்படுத்தி விடுவதற்காக அனைத்து விதமான உதவிகள் செய்து தரப்படும். அந்த வகையிலான திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறப்படுகிறது.
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு முதலீடுகளை குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. வீட்டு வசதி, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடும்ப நல உள்ளிட்டவற்றைக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.