கட்டணம் கட்டாத மாணவர்; தேர்வு எழுத விடாமல் தடுத்த தனியார் பள்ளி நிர்வாகம் - நடந்தது என்ன..?
தனியார் பள்ளி நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வந்த பெற்றோரை வெளியே அனுப்பாமல் பள்ளி வாயிலை மூடி 5 மணி நேரத்திற்கு மேலாக அவர்களை அலைகழித்த பள்ளி நிர்வாகம்.
திருவண்ணாமலை அடுத்த சத்திரம் மோட்டூர் கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் எல்கேஜி முதல் +2 வகுப்பு வரை சுமார் 600-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆதாம் அவரது மனைவி கீதா இவர்களது மகன் நிஷார் எட்டாம் வகுப்பும், யுகேஜி படிக்கும் நிஷாந்த் மகனும் என்ற இரண்டு பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நிஷாருக்கு பள்ளி கட்டணம் கட்டவில்லை எனக் கூறி மாதாந்திர பருவ தேர்வு நடைபெறும் நிலையில் 3 தேர்வுகளை எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாணவர்களுக்கும் பள்ளி கட்டணத்தை நேற்று பெற்றோர் கட்டிய நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் காலையில் பள்ளிக்கு பேருந்தில் வரும்போது ஸ்னாக்ஸ் வாங்க வண்டியை நிறுத்தச் சொன்னதாக கூறி பெற்றோரை மாலை 3 மணிக்கு பள்ளிக்கு வர பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது.
ஆனால் காலை 10 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர்களின் தாய் கீதா மற்றும் அவரது மைத்துனர் அஸ்லாம் ஆகியோரை பள்ளி நிர்வாகம் ஏன் காலையில் வந்தீர்கள் மாலையில் தானே வரச் சொன்னேன் எனக்கூறி அவர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். மேலும் பள்ளிக்கு உள்ளே வந்த பெற்றோர்களை பள்ளிக்கு வெளியே செல்ல விடாமல் கதவிற்கு பூட்டு போட்டு பள்ளி நிர்வாகம் அலட்சிய போக்கோடு நடந்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பள்ளி நடைபெறும் நாட்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உணவு செய்து எடுத்துக் கொண்டு வர வேண்டும். பிரியாணி செய்து எடுத்து வாருங்கள் என கூறியும், பல பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் சமயங்களில் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். லட்சக்கணக்கில் தனியார் பள்ளியில் பேருந்து கட்டணம், பள்ளி கட்டணம், சீருடை கட்டணம், இது மட்டுமல்லாது ஷூ போடவில்லை, காலர் மடிந்துள்ளது, முடிவெட்டவில்லை, சட்டையை டக்கின் செய்யவில்லை இதுபோன்று பல ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டார்கள் என கூறி பல சமயங்களில் அபராதம் விதித்து அபராத தொகையை பெற்று வந்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
அதுமட்டுமின்றி ஆண்டு விழாவிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 2200 கட்டாயம் கட்ட வேண்டும் என்றும் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந்த பணத்தை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்ததாகவும் பெற்றோர் வேதனையுடன் குற்றம் சாட்டினர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் பள்ளிக்குள் பள்ளி நிர்வாகம் சேர்க்காமல் வாயிலை இழுத்து மூடியது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் வந்த போதும் பள்ளி நிர்வாகம் பள்ளி வாயிலை திறக்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலைகழித்த நிலையில் இறுதியாக காவல்துறையினரையும் பள்ளிக் கல்வித் துறையினரையும் உள்ளே அழைத்து பேசியது. தொடர்ந்து பேச்சு வார்த்தை முடிந்து மகன்களை பெற்றோர் அழைத்துச் செல்ல வந்த நிலையில் பள்ளியில் இருந்து மாணவர் கண்ணீருடன் தேம்பி தேம்பி அழுத படியே வெளியே வந்ததை பார்த்த பெற்றோர் மற்றும் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பெற்றோர் போலீசார் வந்தவுடன் உள்ளே சென்று பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.