பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
திருவண்ணாமலை விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயி ஒருவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயி குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகாவில் திருவண்ணாமலை மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளும் தாலுக்கா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இன்று திருவண்ணாமலை வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் வந்திருந்த நிலையில் துரிஞ்சாபுரம் வட்டாரவளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் வராததால் விவசாயிகள் ஆத்திரமடைந்து திடீரென விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் கோமா நிலைமைக்கு சென்று விட்டதாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் துரிஞ்சாபுரம் வட்டாரவளர்ச்சி அலுவலர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் திடீரென திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து தீக்குளிக்க போவதாக கூறி வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்தனர். இதனை கவனித்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த பெட்ரோலை பறிமுதல் செய்து கீழே ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.
குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும், விவசாய குறைதீர்வு கூட்டத்திற்கு அணைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ளவேண்டும், திருவண்ணாமலை மாவட்டம் வேலையாம் பாக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு தார்சாலை போடவேண்டும், துரிஞ்சப்புறம் பகுதியில் விவசாயிகளுக்கு போதுமான உரம் கிடைப்பதில்லை, அதேபோன்று தரமான விதைகள் அணைத்து தனியார் மருந்து கடைகளில் விதைகளின் விலை அதிகரித்துள்ளது இதனை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கிராமத்தில் உள்ள ஏரி, குளங்கள் ஆக்கரமிப்பில் உள்ளது. நீர்நிலைகளை தூர்வார வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகலய் விவசாயிகள் வைத்தனர்.