திருப்பூர்: சரளமாக பேச முடியாததால் மனமுடைந்த 11 வகுப்பு மாணவரின் விபரீத முடிவு.. வேதனையில் மூழ்கிய குடும்பம்..
மாணவர் விமல்ராஜ் பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரெண்டாம் வகுப்பு செல்லும் நிலையில், இருதினம் முன்பு இரவு நேரத்தில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரயில் முன் பாய்ந்து, பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிபாளையம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கணேசன் மகன் விமல்ராஜ் என்பவர்தான் தற்கொலை செய்துகொண்டவர் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 17 வயதாகும் இவர் வீட்டின் அருகிலுள்ள வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி திறப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக செய்திகள் வந்தன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆம் தேதி திறக்க இருக்கிறது. இந்த நிலையில் மாணவர் விமல்ராஜ் பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரெண்டாம் வகுப்பு செல்லும் நிலையில், இருதினம் முன்பு இரவு நேரத்தில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா
கொரோனா காரணமாக வெகுவாக பள்ளிக்கு செல்லாத நிலையில் 3 வருடத்திற்கு பிறகு சீராக பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை இருப்பதால் மாணவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மாணவர் விமல்ராஜுக்கு சரளமாக பேசுவதில் சிக்கல் இருப்பதால் மற்ற மாணவர்களுடன் பழகுவதற்கு முன்பிருந்தே கூச்சப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டியிலேயே இருந்துவிட்டதால் அந்த சங்கடம் வராமல் நிம்மதியாக இருந்து வந்துள்ளார். ஆனால் திரும்பவும் அதே பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது.
கடிதம்
ரயில்வே போலீசார், அவரின் உடலை கைப்பற்றி, தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். மாணவர் விமல்ராஜ் விமல்ராஜ், அவரது வீட்டில் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். கடிதத்தில் கூறியிருந்ததாவது: "எனக்கு திக்கு வாய் என்பதால், நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேச முடியவில்லை. பெற்றோருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ் யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள்!", என்று எழுதியிருந்தார்.
மருத்துவக்கல்லூரி டீன்
திருப்பூர் மருத்துவ கல்லுாரி 'டீன் முருகேசன் கூறியதாவது, "வாழ்க்கை வாழ்வதற்கே. யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்ககூடாது. ஒவ்வொருவருக்கும் தக்க அறிவுரை, வழிகாட்டுதல்களை வழங்க மன நல ஆலோசனை மையம் திருப்பூரில் செயல்படுகிறது. அதில், டாக்டர் குழுவினர் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளனர். தவறான முடிவெடுக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்தால், பாதையே மாறிவிடும்" என அவர் கூறினார்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்