நலம் விசாரித்த முதல்வர்! பாய்ந்த வழக்கு! பெண் எஸ்ஐ கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை!
கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
பெண் எஸ்.ஐ. மீது சரமாரியாக கத்தியால் குத்திய நபர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த போலீசாரை தமிழக முதலமைச்சர் போனில் நலம் விசாரித்தார்
திருநெல்வேலியில் பெண் எஸ்.ஐ. கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண் போலீசாரை கத்தியால் குத்திய ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 353, 307 என இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே காயமடைந்த போலீசாரை தமிழக முதலமைச்சர் போனில் நலம் விசாரித்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ''திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
என்ன பகை?
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார்.
அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் திரேஷாவை ஆறுமுகம் குத்தியுள்ளார்.
(கத்தியால் குத்திய நபர்)
நெல்லையில் தொடரும் பதட்டம்..
ஏற்கனவே நெல்லையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.