Metoo புகார்கள் முதல், விருது மறுபரிசீலனை வரை! - வைரமுத்து விவகாரம் ஒரு டைம்லைன்
பல கலைஞர்களைச் சினிமாவுக்கு அனுப்பிய பச்சையப்பன் கல்லூரியிலிருந்து 80களில் ’நிழல்கள்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.திருத்தி எழுதிய தீர்ப்புகள் எழுதியவரை திரைப்படத்துக்கு அழைத்துவந்தார் இயக்குநர் பாரதிராஜா.
இலக்கியவாதிகளுக்கான உயரிய கௌரவமாக ஞானபீட விருதுகள் கருதப்படுகின்றன. அந்த ஞானபீட விருதப்பெற்ற இலக்கியவாதியின் பெயரால் ஒரு விருதென்பது மாபெரும் கௌரவம். ஞானபீட விருதுபெற்ற மலையாளக் கவிஞரும் இலக்கியவாதியுமான ஓ.என்.வி.குறுப்பு பெயரிலான வருடாந்திர விருது இந்த ஆண்டு தமிழ்க் கவிஞர் வைரமுத்துவுக்குத் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தில் தனது இளமைக்காலம் தொட்டே தடம்பதித்துவிட்டவர் என்றாலும் தமிழ் சினிமாவில் வைரமுத்து என்பது நான்கு தசாப்தங்களின் நீட்சி.
பல கலைஞர்களைச் சினிமாவுக்கு அனுப்பிய பச்சையப்பன் கல்லூரியிலிருந்து 80களில் ’நிழல்கள்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.திருத்தி எழுதிய தீர்ப்பு எழுதியவரை திரைப்படத்துக்கு அழைத்துவந்தார் இயக்குநர் பாரதிராஜா.
இளையராஜாவுடன் தொடங்கிய பயணம் சில வருடங்கள் மட்டுமே நீடித்தாலும். இன்றளவும் ரசிகர்களுக்கு மிக நெருக்கமான பாடல்களை அந்த இணை உருவாக்கியது. இருவருக்கும் இடையிலான விரிசல் காரணமாக வைரமுத்து வாய்ப்பிழந்திருந்த நிலையில் அவரது அடுத்த மூன்று தசாப்தங்களுக்கான இசைத்துணையாக வந்து சேர்ந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இந்த இணையும் தொடர்ந்து பல முட்டல் மோதல்களைச் சந்தித்தாலும் அவ்வப்போது பிரிவதும் சேர்வதுமாய் பல படைப்புகளைத் தந்தார்கள். இறுதியாக மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தோடு இந்த இணையின் படைப்புகள் முடிவுக்கு வந்தன. கிட்டத்தட்ட அதே சமயம்தான் #MeToo பாலியல் வன்குற்றப் புகார்களும் சர்வதேச அளவில் கவனம்பெற தொடங்கியிருந்தன.தமிழ் உலகம் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில், பாடலாசிரியர் வைரமுத்து அந்த MeToo புகாரில் சிக்கினார்.
’நீர் நினைத்தால், பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்’
எனப் பெண்ணின் வலிமையைத் தனது வரிகளில் மெச்சியவர் பாலியல் குற்றவாளியா எனப் பலர் புருவம் உயர்த்தினார்கள்.
கவிஞர் வைரமுத்து மீதான குற்றப்பட்டியல்
’எனக்கு அப்போது 18 வயது. ஒரு ப்ராஜக்ட்டுக்காக அவரிடம் பணியாற்ற வேண்டிய சூழல் உருவானது.என்னைப் பொருத்தவரை அவர் ஒரு சகாப்தம், கவிஞர், தேசிய விருதுபெற்றவர் என்கிற மிகப்பெரிய மரியாதை இருந்தது.ஆனால் பாடல்வரிகளை விளக்கும் போக்கில் என்னருகில் வந்து கட்டியணைத்தார். முத்தமிட்டார். எனக்கு அப்போது என்ன செய்வது எனத் தெரியவில்லை அதனால் பதட்டத்துடன் ’ஓகே சார், சரி சார்’ எனச் சொல்லிவிட்டு அவரது அலுவலகத்திலிருந்து வெளியே ஓடி வந்தேன். அதன் பிறகு கூட்டமாக மட்டுமே அவரைச் சந்திப்பது என முடிவு செய்தேன். அந்த வைரமுத்து சூரையாடுபவர் என்பது தமிழ்த்திரையுலகத்தில் அனைவரும் அறிந்த ரகசியம்.அவருடைய அரசியல் பலத்தைக் கொண்டு பாதிக்கப்பட்டவரகளை ஒடுக்குவார். அதனால் இதுகுறித்து யாரும் வெளியே சொல்ல முன்வருவதில்லை’ வைரமுத்துவுக்கு எதிராக வெளியான முதல் புகார் இதுதான்.
இந்தப் புகாரை அடுத்து பல்வேறு பெண்கள் வைரமுத்து மீது தொடர்ச்சியாகப் புகார் அளிக்கத் தொடங்கினார்கள். கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய கரங்கள் கரைபடிந்தவை என்றார்கள் அந்தப் பெண்கள். பாடகர் சின்மயி, புவனா சேஷன், இசைக்கோர்ப்பாளர் சிந்துஜா ராஜாராம் ஆகியோர் வெளிப்படையாகத் தாங்கள் பாதிக்கப்பட்ட அனுபவங்களை முன்வைத்தார்கள். தனது கலைத்தொழிலையே நாசம் செய்தவர் வைரமுத்து என வெளிப்படையாகவே பதிவிட்டார் பாடகர் புவனா.
I am on twitter just to clarify a few things. There are various versions of my story floating around in the media. Its clear that they want to sensationalize my story. Only @thenewsminute article was an accurate account of what i said.@dhanyarajendran @Chinmayi https://t.co/1NDsLGcZxH
— Sindhuja Rajaram (@rajaramsindhuja) October 15, 2018
அமெரிக்காவிலிருந்தபடியே தமிழ்நாட்டின் பல்வேறு ஊடகங்களுக்குப் பேசினார் சிந்துஜா. வைரமுத்துவின் மகனான கவிஞர் மதன் கார்க்கியே தனது தந்தை அப்படித்தான் எனத் தன்னிடம் சொன்னதாகப் பகிர்ந்திருந்தார் பாடகர் சின்மயி. கார்க்கியும் சின்மயியும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் சின்மயி வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய அடுத்தநாளே அவரை ட்விட்டரில் ப்ளாக் செய்தார் மதன் கார்க்கி. 17 பெண்களின் புகார்கள் வெறுமனே ‘சின்மயி-வைரமுத்து’ விவகாரமாக மாறியது இப்படித்தான்..
எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.
— வைரமுத்து (@Vairamuthu) December 31, 2019
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?
‘எல்லோரும் என் பக்கமிருக்க நான் ஏன் கவலைகொள்ளவேண்டும்?’ என ட்வீட் செய்தார் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக நின்றார்கள். சின்மயி பாரதிய ஜனதாவின் தூண்டுதலால் இதைச் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டார். தமிழ் சினிமாத்துறை அவரை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கியது. தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் பாடிவந்தவர் பாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டார். பின்னணிக்குரலுக்காக முத்திரை பதித்தவரை அந்தச் சங்கத்திலிருந்தே நீக்கினார் அதன் தலைவர் நடிகர் ராதாரவி.’பதினைந்து இருபது வருடம் கழித்து ட்வீட் செய்யவேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டார் ஊடகவியலாளர் பாண்டே. பாடலாசிரியர் வைரமுத்துவிடம் இது குறித்து இன்றுவரை எவ்வித பொது விளக்கமும் கேட்கப்படவில்லை.
பகுத்தறிவும் பெண்ணுரிமையும் கொள்கையாகக் கொண்ட அவர் சார்ந்த திமுக ஆளுங்கட்சியான பிறகும் இந்த விவகாரத்தில் நிலைப்பாடு எடுக்கவில்லை இதற்கிடையேதான் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டது. அதைத் தமிழ் மொழிக்குப் பெருமை என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ’எதுவுமே நடக்காத மாதிரி, இவரை மேடை ஏற்றி மகுடம் சூட்டி, பெரிய்ய யோகியர் மாதிரி scene போடறதெல்லாம் ஒரு பாலியல் குற்றவாளிய encourage பண்ணுற மாதிரி தான்’ என அதனை விமர்ச்சித்தார் பாடகர் சின்மயி.
கடவுளின் நாடென புகழப்படும் கேரளாவிலும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன,’ஓ.என்.வி.குறுப்பு எங்களது கௌரவம். ஒரு பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்க்கு அவர் பெயரால் விருதா?’ எனக் கொதித்தார் நடிகர் பார்வதி. அவரை வழிமொழிந்தனர் பல்வேறு நடிகர்கள். தொடர் அழுத்தத்தால் விருது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது விருது வழங்கும் அகாடெமி.
வருகின்ற அக்டோபர் மாதத்தோடு வைரமுத்து மீதான மீ-டு புகார்கள் எழுப்பப்பட்டு மூன்றாண்டுகள் முடிவடைகின்றன. ’அவர் அப்படித்தான்’ என வெளிப்படையாகவே சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றும் ஏன் இத்தனை மௌனம். கலையா? மக்களா? என்றால் மக்களென்று முடிவெடுக்க அரசுக்கு ஏன் இத்தனைத் தயக்கம்?. ’ஒருநாள் உலகம் நீதிபெறும்’ என்ற நம்பிக்கை வெறும் பாடலோடு மட்டும் இருந்துவிடவேண்டாம்.
Also Read: வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருதா? பெரிய அவமானம் - நடிகை பார்வதி ட்வீட்