தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ’’பாசிச பாஜக ஒழிக’’ புகழ் சோபியா தொடந்த வழக்கு - தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் பதில் தர உத்தரவு
ஆளுநராக தமிழிசையை வழக்கில் இருந்து விடுவிக்கவும் அதற்கு பதிலாக முதலில் புகார் கொடுத்த தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் எதிர்மனுதாரராக சேர்ப்பு
தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கனடாவிலுள்ள மாண்ட்ரீல் பல்கலையில் படித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பயணித்தேன். என்னுடன் அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் வந்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலர் இறந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்தை தெரிவித்தேன்.
இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை சவுந்தர்ராஜன் விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் கடுமையாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக தமிழிசை சவுந்திரராஜன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்துறையினர் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை.
எனவே, என் மீதான வழக்கில் காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் சோபியா மீதான வழக்கை விசாரிக்க ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தெலுங்கான ஆளுநராக தமிழிசையை வழக்கில் இருந்து விடுவிக்கவும் அதற்குப் பதிலாக முதலில் புகார் கொடுத்த தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் என்பவரை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜீன் 19ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைகொள்ளை வழக்கில் தாமதம் ஏன்? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக திருவாரூர் மணிகண்டன், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4.7 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கனகவல்லியின் மகன் சுரேஷ், செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுரேஷ் தனக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு முடியும் வரை வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் நாள் தோறும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும்.வழக்கு முடியும் வரை வாரந்தோறும் புதன் கிழமை, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள், விசாரணை நடத்தும் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.