(Source: ECI/ABP News/ABP Majha)
குப்பைத்தொட்டி அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை - கண்டனம் தெரிவித்து அதிமுக போராட்டம்
’’ஜெயலலிதாவின் முழு சிலையை முறையாக பாதுகாக்க முடியாத தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து சிலையை அதிமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க கோரிக்கை’’
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் உள்ளது. இதன் நுழைவாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு திருவுருவ சிலை வைக்கப்பட்டது. அப்போது திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை, தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் ஜெயலலிதாவின் உருவ சிமெண்ட் சிலையை கைப்பற்றி கொண்டு வந்து செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைத்தனர். ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பைகள், மற்றும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் பழுது ஏற்பட்ட இதர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டும் இடத்தில் தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பற்ற முறையில் பராமரிப்பின்றி அலட்சியத்துடன் சிலை வைக்கப்பட்டு இருந்ததை அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த தகவலினை அறிந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி.மனோகரன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தேர்வுநிலை பேரூராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் முனுசாமி மற்றும் , துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான காவல்துறையினர் பேரூராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஜெயலலிதாவின் முழு சிலையை முறையாக பாதுகாக்க முடியாத தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து சிலையை அதிமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் ஒப்படையுங்கள் என்றும் ஜெயலலிதா சிலையை நாங்கள் கைப்பற்றி நாங்கள் தனி அறையில் வைத்து பாதுகாத்து கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் முனுசாமி, துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் மாவட்ட நிர்வாகத்தில் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் தேர்வு நிலை பேரூராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அதே இடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு திருவுருவ சிலையை முறைப்படுத்தி தகர சீட் அமைத்து தனி அறையில் பாதுகாப்பு படுத்திய பின்னர் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.