Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி... யார் யார் செல்லலாம் தெரியுமா.?
திருப்பரங்குன்றத்தில் நேற்று இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், மலை மீது உள்ள கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், யார் யார் செல்லலாம் தெரியுமா.?

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், இந்து முன்னணியினர் நேற்று(04.02.25) ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்ல இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முண்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலம் முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும், பொதுமக்கள் யாரும் இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கு வருகைதர வேண்டாம் என காவல்துறை சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
144 தடை உத்தரவு
இந்நிலையில், 2 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி இந்து அமைப்புகள் வரவுள்ளதாக அறிவித்ததால், மதுரை மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் சோதனையிட்டதோடு, ரயில் நிலையங்களிலும் சோதனை செய்தனர்.
இந்நிலையில், தடையை மீறி திருப்பரங்குன்றம் கோயிலை நோக்கி வருகை தந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் உள்ளிட்டோர் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோயில் அன்னதான கூடத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கோயில் நடை சாத்தப்பட்ட நிலையில், கோயில் கதவுகள் நடை திறக்கும் வரை மூடப்பட்டது. இதனிடையே, மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் என்பவர், இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல என கூறி மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அசாதாரண சூழ்நிலை
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை, தொடக்கத்திலயே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் அலட்சியத்தை கையாண்டதால், திருப்பரங்குன்றத்தில் இந்து-இஸ்லாமியர் இடையே அசாதரண சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டு, மாவட்டம் முழுதும் பதற்றத்தை உருவாக்கியது. மேலும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதரமும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதோடு, தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கும், சிக்கந்தர் தர்ஹாவிற்கு செல்லும் பக்தர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல இன்று அனுமதி
இதனிடையே, இது குறித்து பேசிய திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் இந்து - இஸ்லாமியர் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், வெளியூரில் இருந்து வந்து போராட்டம் நடத்துகிறார்கள், எதற்கு இந்த பிரச்னை என தெரியவில்லை, நாங்கள் மாமன் - மச்சானாக இருந்துவருகிறோம், எங்களுக்கு முருகனும் ஒன்றுதான், அல்லாவும் ஒன்றுதான் - அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை என தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பாதுகாப்பு கருதி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு இயக்கமாகவோ, அமைப்பாகவோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் மட்டும் கோயிலுக்கும், தர்காவிற்கும் சென்று வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

