Ariyalur Excavation : சோழர்களுக்கும் சீனர்களுக்கும் தொடர்பா? அரியலூர் மாளிகைமேடு அகழாய்வில் சீன அச்சு கண்டெடுப்பு!
அரியலூர் மாளிகைமேடு கிராமத்தில் நடந்து வரும் அகழ்வாய்வில் சீன பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Ariyalur Excavation : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் 3ஆம் கட்ட அகழாய்வில் சீன பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகள்
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்று முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்தது. கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின்போது பழங்கால தமிழகர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இதனை தொடர்ந்து தற்போது இதில் கங்கை கொண்ட சோழபுரமும் ஒன்று. கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகைமேடு என்ற பகுதியில் தற்போது தமிழக அரசின் சார்பில் தொல்பொருள் துறை அகழாய்வு நடைபெற்று வருகிறது.
சீன அச்சு கண்டெடுப்பு
இந்த அகழாய்வின்போது, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடுமண் முத்திரை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்கும் அச்சு, சுடு மண்ணால் ஆன முத்திரை உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தமிழகம் சீனா இடையே வணிகத் தொடர்பில் பின்பற்ற அரசு முத்திரைகள் குறித்து தெரிவிக்கும் தரவாக உள்ளது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ் நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு… pic.twitter.com/xQC7cNJRZO
— Thangam Thenarasu (@TThenarasu) June 28, 2023
பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்” என்று பதிவிட்டிருந்தார்.