தனது மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை...மன உளைச்சலில் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காகவது எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்றால் முடியவில்லை, தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகின்றது - முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மேலும் புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து பெறுவதற்கு முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும், சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும், புதுச்சேரியில் உள்ள சமூக நல அமைப்புகளை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்டு சமூக அமைப்பினரிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என ஆளுபவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் தெரிவித்தார். மேலும் ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறார் என சிலர் கோலி செய்வதாக கூறிய அவர், புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசிடம் கேட்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கிய நிலையில், அதை செயல்படுத்தக்கூடாது என்ற மனநிலையோடு அதிகாரிகள் உள்ளதாகவும், அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.