‛சில்க் ஸ்மிதா’ வளைகாப்பு: கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர்! தேனியில் நெகிழ்ச்சி!
லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம், பொங்கல், கேசரி என விதவிதமான வெரைட்டி ரைஸ் சமைக்கப்பட்டு, உறவினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
ப்ரியம்... ஒன்று தான் மாறாதது...! அது யார் மீது, யார் வைத்த ப்ரியம் என்பதில் இருந்து, எது மாதிரியான ப்ரியம் என்பது வரை அலாதியானது. அப்படி ஒரு ப்ரியம் தான், நாய்க்கு வளைகாப்பு நடத்தும் அளவிற்கு ஒரு குடும்பத்தை தூண்டியுள்ளது.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை காமராஜபுரம் ரோடு பகுதியில் வசிப்பவர் குமரேசன். 43 வயதாகிறது. அவரது மனைவி அம்சவேணிக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு தமிழ்செல்வன், கல்பனா தேவி என இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம். அதில் பெண் நாய்கள் வளர்ப்பதில் இவர்களுக்கு இருந்த ஆர்வத்தால், பொமரேனியன், கோம்பை, சிப்பிப்பாறை என பலதரப்பட்ட உயர் ரக மற்றும் நாட்டு நாய்களை வீட்டில் வளர்த்து வந்தனர். சுமார் 10 பெண் நாய்களை அவர்கள் வளர்த்து வந்த நிலையில், அவற்றிக்கு தங்கள் விருப்பப்படி பெயர்கள் சூட்டி அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தெருவில் ஆதரவின்றி கிடந்த பெண் நாள் ஒன்றை தத்தெடுத்த இவர்கள், அதற்கு சில்க் சுமிதா என்று பெயர் வைத்து வளர்த்து வந்தனர். சமீபத்தில் சில்க் சுமிதா கருவுற்றது. மூன்று மாதங்களில் அது பிரசவிக்கும் என்பதால், முன்கூட்டியே அதற்கு வளைகாப்பு நடத்த தமிழ்செல்வன் மற்றும் கல்பனா தேவி ஆகியோர் முடிவு செய்தனர். அதன் படி, தங்கள் உறவினர்களுக்கு சில்க் வளைகாப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
உறவினர்கள் முன்னிலையில் புடவை உடுத்தி, மஞ்சள் பூசி, மாலையிட்டு, குங்குமமிட்டு அலங்கரிக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்கு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வழக்கமாக நடத்தப்படும் வளைகாப்பில் ஏற்பாடு செய்யப்படுவதைப் போன்றே லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம், பொங்கல், கேசரி என விதவிதமான வெரைட்டி ரைஸ் சமைக்கப்பட்டு, உறவினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. ‛‛இது எங்கள் நாய் அல்ல... எங்களில் ஒரு ஜீவன். நன்றி உள்ள ஜீவன். அதற்கு மதிப்பு அளிப்பதற்காகவே இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினோம்,’’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நாய் வளர்ப்பாளரான தமிழ் செல்வன். சில்க் ஸ்மிதாவிற்கு பிறக்கும் குட்டியை எதிர்பார்த்து சக தோழி நாய்கள் காத்திருக்கின்றன.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்