Ennore Oil Spill: எண்ணூர் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிறுவனம்தான் காரணம்.. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பகீர் தகவல்..
எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு காரணம் சிபிசிஎல் நிறுவனம் தான் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் கூறியுள்ளது.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொசஸ்தலை ஆறு என்பது மீன்கள் இனப்பெருக்கத்திற்கான முக்கிய ஆதாரம். எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆற்றில் எண்ணெய் திறந்துவிட்ட நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமை தீர்ப்பாயம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, “மணலி தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளைக் காண முடிகிறது. "Traces of Oil" என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லையே என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் TRACES OF OIL என்கிறது, ஆனால் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்” என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
பின்னர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து திங்கட்கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று, தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. எண்ணெய் அகற்றும் பணிகள நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர், சாய் சத்ய ஜித், ” 9 ஆம் தேதி CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11 கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது” என வாதிட்டார்.
அப்போது, தீர்ப்பாயம், ” 7ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் தெற்கு வாசலில் மட்டுமே எண்ணெய் காணப்பட்டதாக கூறினீர்கள், அன்று ஆய்வு செய்யும்போது குழாய்கள், எண்ணெய் கலன்களில் கசிவு இருக்கா என பார்க்கவில்லையா?” என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சாய் சத்ய ஜித், “ CPCL ஆலை அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததும், மழைநீர் தேக்கி வைக்கும் குளம் போதுமனதாக இல்லாததும் முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்குக் காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என குறிப்பிட்டார்.