இந்த முறையாவது உரையாற்றுவாரா ஆளுநர் ரவி.! சட்டசபை கூட்டத்திற்கு தேதி குறித்த தமிழக அரசு
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையோடு ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் உரையோடு இந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கப்படவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம் அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எப்போதும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபை கூட்டம் நடைபெறும்.
பொங்கலுக்கு பிறகு சட்டசபை கூட்டம்
ஆனால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் முதல் வாரம் கூட்டம் நடைபெறவில்லை. மேலும் பொங்கல் பரிசு தொகுப்புகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதால் பொங்கலுக்கு பிறகு சட்டசபை கூட்டமானது நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தமிழகசட்டசபை கூட்டத்திற்கான கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜனவரி 20ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவித்தார். அன்றைய தினமே அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவாகும் என சபாநாயகர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசு தயாரித்த உரையை இந்தாண்டு முழுமையாக ஆளுநர் ரவி படிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
ஆளுநர் உரையை வாசிப்பாரா.?
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துக்களை கூடுதலாக சேர்த்து பேசினார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஆளுநர் பேசிய வார்த்தைகளும் நீக்கப்பட்டது. அடுத்ததாக கடந்த 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் போதும், தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த ஆர்.என்.ரவி, தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.
2025 இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டசபை தொடங்கிய போது சட்ட சபையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே வாசிக்கப்படுகிறது. தேசிய கீதம் இசைக்கப்பட்டவில்லையென கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார். எனவே இந்தாண்டாவது ஆளுநர் ரவி தனது உரையை வாசிப்பாரா .? அல்லது எப்போதும் போல் புறக்கணிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.





















