NLC: என்.எல்.சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அனுகினால் பரிசீலிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்
என்.எல்.சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அனுகினால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் 25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலத்தை கொடுத்த உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .
தன்னுடைய மனுவில், ஏற்கனவே 25 ஆயிரம் குடும்பங்களிடமிருந்து 37 ஆயிரத்து 256 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய போதிலும், நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள்ளார்.
கையகப்படுத்தும் நிலம் விவசாய நிலம் என்பதை கருத்தில்கொண்டு, ஏக்கருக்கு 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு குறைந்தபட்ச இழப்பீட்டை கொடுத்துவிட்டு, நிலத்தின் சந்தை மதிப்பிற்கு இணையாக என்.எல்.சி. பங்குகளை வழங்க வேண்டும், கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு அருகிலேயே தங்கள் கிராமங்களை மறு உருவாக்கம் செய்துதர வேண்டும், வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து முன்னுரிமை வழங்க வேண்டும், நிலத்தின் பயன்பாடு முடிந்தபிறகு அந்தந்த உரிமையாளர்களிடம் திருப்பித்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. நிர்வாகம், தமிழக அரசு ஆகியோருக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தங்களது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும், 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு சட்டப்படி இழப்பீடு வழங்குவத்ற்கு பதில், மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றார்.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா? இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட விவரங்கள் மனுவில் இடம்பெறவில்லை என்பதால் மனுவை ஏற்க முடியாது எனவும், மனுதாரர் பாதிக்கப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதற்கு முன் கடந்த மாதம், என்.எல்.சி சுரங்க பணிகளுக்கான விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற நிலையில் விளை நிலங்கள் சேதமடைந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கையகப்படுத்திய பிறகு நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்? வேலி அமைக்காதது தவறு என என்.எல்.சி நிர்வாகத்தை கேள்வியெழுப்பியது. அதேபோல் அந்த நிலத்தில் அவர்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டது தவறு எனவும் தெரிவித்தனர். எனவே ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின் அந்த நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தனர்.