பிரதமர் முதல் ஆளுநர் வரை ஸ்டாலின் பரிசளித்த புத்தகங்களை தெரியுமா?
அறிவாலயத்தின் முகப்பிலேயே "பூங்கொத்துகள் வேண்டாம். புத்தகங்கள் போதும்" என எழுதி ஒட்டப்பட்டிருக்கும். அதையே ஸ்டாலினும் ஃபாலோ செய்கிறார்.
தலைவர்களை பார்க்க வருபவர்கள் பொதுவாக பொன்னாடைகள் போர்த்துவார்கள் அல்லது பூங்கொத்துகளை கொடுப்பார்கள். தற்போது அந்த கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில்தான் அறிவாலயத்தின் முகப்பிலேயே ”பூங்கொத்துகள் வேண்டாம். புத்தகங்கள் போதும்" என எழுதி ஒட்டப்பட்டிருக்கும். அதையே அவரும் ஃபாலோ செய்கிறார். எந்த ஒரு முக்கிய பிரமுகர்களை சந்தித்தாலும் புத்தகங்களை வழங்குகிறார்.
புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கினார். ‘கீழடி’ என்ற புத்தகத்தையும் ‘மெட்ராஸ்’ எனும் முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.இதில் ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது, இன்னொன்று சென்னை வரலாறு தொடர்பானது. இதனால் குறிப்பிட்ட அந்த இரண்டு புத்தகங்களை தேர்ந்தெடுத்து வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே போல முதலமைச்சராக பதவியேற்ற பிறகு டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது மோடிக்கு அஜயன் பாலா எழுதிய ‘செம்மொழி சிற்பிகள்’ என்ற புத்தகத்தை அவர் பரிசாக வழங்கினார். அதில்100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் படங்கள் ஆகியவை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். 2010ல் தமிழக அரசின் செம்மொழி மாநாட்டுக்காக தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் சிறந்த வரலாற்றுப் புத்தகம் என்று தமிழ் ஆர்வலர்களால் குறிப்பிடப்படுகிறது.
இதேபோன்று, அதே சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய ’Journey Of A Civilization Indus To Vaigai’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் ஸ்டாலின். சிந்துசமவெளி பண்பாட்டில் திராவிட நாகரிகத்தின் கூறுகள் பெருமளவு இருப்பதை தனது நூலில் ஏராளமான சான்றுகளுடன் விளக்கியிருப்பார் பால கிருஷ்ணன். திராவிட மொழிகளின் தோற்றம் குறித்தும் இந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் மனோகர் தேவதாஸ் எழுதிய ’The Multiple Facets of My Madurai’ என்ற புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார்.
தொடர்ந்து, சென்னையில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவருக்கு கே.ராஜன் எழுதிய early writing system: a journey from graffiti to brahmi எனும் புத்தகத்தை வழங்கினார். இந்த புத்தகத்தில் தமிழ்நாட்டின் பழங்கால எழுத்து அமைப்பு குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கொடுமணலில் கண்டறியப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு டெல்லியில் சோனியா காந்திக்கு வழங்கிய Journey of a civilization என்ற அதே புத்தகத்தை வழங்கினார் ஸ்டாலின்.
முன்னதாக கருணாநிதி படத்திறப்பு விழாவுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது அவருக்கு 6 புத்தகங்களை பரிசாக வழங்கினார். திருக்குறள், எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள், சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல், தி ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி, கி.ராஜ நாரயணன் எழுதிய கரிசல் கதைகள், ராஜம் கிருஷ்ணனின் சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் சுழலில் மிதக்கும் தீபங்கள் ஆகிய புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.
இப்படி முக்கிய பிரமுகர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் போதெல்லாம் வரலாற்று சிறப்புமிக்க, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எல்லாராலும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.