Governor RN Ravi: சாதி, மத சண்டை போடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேச பேச்சு!
மத ரீதியாக, ஜாதி ரீதியாக இன்று சண்டை போட்டுக் கொள்கிறோம். இதற்காகவா ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர்? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
![Governor RN Ravi: சாதி, மத சண்டை போடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேச பேச்சு! The Governor has instructed to teach the children about the martyrs who fought for freedom and our traditional Thirukkural Thirumantram Governor RN Ravi: சாதி, மத சண்டை போடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேச பேச்சு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/9df467f11a7066ffa274198d2cc27baf1698307735370589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் பற்றியும் நம் பாரம்பரிய திருக்குறள், திருமந்திரம் உள்ளிட்டவை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரை ( தமிழ்நாடு மாநில விழா) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார். மேலும் தபால் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு பல்வேறு மாநிலங்களில் மண் சேகரிக்கப்பட்டு கலசத்தில் வைக்கப்பட்டு வருகிறது.
என்ன காரணம்?
அந்த வகையில் இன்றைய தினம் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மண்ணை டெல்லி செல்லும் குழுவிடம் தமிழக ஆளுநர் மண் கலசங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ” 2 வருடங்களுக்கு முன்பு என் மண் என் தேசம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நாட்டின் பல மூலைகளிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்ட இந்த கலசங்கள் தலைநகர் செல்லவிருக்கிறது. நாட்டின் மண்ணை சேகரித்து போர் சின்னத்தில் சேர்க்கும் இந்த திட்டத்தை பிரதமர் தொடஙக என்ன காரணம்?
ஒவ்வொரு வருடமும் குடியரசு, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பிறகு ஏன் இது? இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர்களை கொண்டாடினோம். இந்தியாவில் பிரிட்டிஷுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களை தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் கொண்டாடினோம். ஆனால், அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிட்டோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தாராளமாக எடுத்துக்கொண்டோம்.
சுதந்திர வீரர்களை மறந்துவிட்டோம்:
1801 ஆம் ஆண்டு இந்த நிலத்தில் தான் சுதந்திர போராட்டம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்கள் முன்பு கூட மருது சகோதரர்கள் தினம் வந்தது. நாம் இவர்களை மறந்து விட்டோம். எத்தனை பேருக்கு நினைவு உள்ளது? ஆயிரக்கணக்கான , மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரத்திற்காக இழந்து உள்ளனர். சுதந்திரம் கிடைத்ததற்கு பின்பு கூட மௌண்ட் பேடன் பிரபு போன்றவர்கள் பொறுப்பில் இருந்து உள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தியாவின் முக்கிய துறைகளை பிரிட்டிஷ்காரர்கள் தான் வைத்திருந்தார்கள். சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானவர்களை நாம் மறந்துவிட்டோம்.
1905 இல் பிரிவினையின்போது இந்து-பெங்கால், முஸ்லிம் பெங்கால் என பிரித்தபோது அனைவரும் எதிர்த்தார்கள். ஏன் அப்படி பிரிக்கவேண்டும்? நாம் அனைவரும் ஒரே நாட்டவர் என குரல் கொடுத்தார்கள், அந்தக் குரல் தான் நம் நாட்டின் குரல். அப்படி இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது. இதற்காகவா? ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொடுத்தோம். ஜாலியன் வாலியாபாக் படுகொலையின்போது தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள். இது தான் நம் நாட்டின் ஒற்றுமை. சட்டம் நமக்கான அடிப்படைக் கடமைகளை கொடுத்துள்ளது. அதில், நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களை கொண்டாடி போற்ற வேண்டும் எனக் கூறுகிறது.
இதுதான் சுதந்திர இந்தியாவா?
சுதந்திரம் பெற்றபோது காந்தி சோகமாக இருந்தார். பிரிட்டிஷ் நம் நாட்டிலிருந்து பார்வையில் வெளியேறினாலும், பல வகையில் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்றனர். நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தப் பிடியிலிருந்து விலகினால் தான் இந்தியா சுதந்திரமடைந்ததாக அர்த்தம்.
மதரீதியாக ஜாதி ரீதியாக இன்று நாம் சண்டை போட்டுக் கொள்கிறோம் இதுதான் நமது சுதந்திர இந்தியாவா? தேசிய சுதந்திரத்திற்காக தமிழகத்திலிருந்து காமராஜர் பள்ளி படிப்பை விட்டு விட்டு சுதந்திரத்திற்காக போராடினார், இதேபோன்று தமிழகத்தில் அநேகர் இந்த சுதந்திரத்திற்காக பங்கேற்றனர், அதை நாம் நினைவு கொள்ள வேண்டும். உத்திரமேரூர் சென்று பார்த்த பொழுது ஜனநாயகம் என்பது என்ன என்பதை குறிப்பிட்டு உள்ளார்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அதையே வழிமுறை என குறிப்பிட்டுள்ளார்கள், நாம் அனைவரும் அமிர்த கலச யாத்திரையை ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும், தேச பற்று என்பது அனைவரின் உணர்வில் இருக்க வேண்டும்.
திருக்குறள், திருமந்திரம்:
இன்று பாரத நாட்டை அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இடத்தில் இருக்கிறோம். நாம் அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். நம் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள், அது திருக்குறள், திருமந்திரம் என அனைத்தையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்” என கூறியுள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில் சின்ன மாநிலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்தனர் என்றவர்," எந்நன்றி கொன்றார்க்கும்" என்ற திருக்குறளை இரு முறை சொன்னார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)