Kalaignar Magalir Urimai Scheme: மகளிர் உரிமைத்தொகை: இனி மாதந்தோறும் ஆய்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதந்தோறும் ரூபாய் 1000:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.
பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதலமைச்சர் விளக்கம்:
மகளிர் உரிமை தொகை தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும்.
எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.
சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்” என குறிப்பிட்டு பேசினார்.
மாதந்தோறும் ஆய்வு:
ஒரு சிலருக்கு 14 ஆம் தேதியே அவர்களது கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணப்பித்த பலருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. அதன்படி கடந்த மாதம் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்றும் வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை திட்டத்தில் உள்ள 1.65 கோடி பயனாளிகள் உள்ளனர். வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.