மேலும் அறிய
Advertisement
தமிழர் வரலாற்றில், சிவகளை அகழாய்வு முக்கிய அத்தியாயத்தை எழுதும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
எலும்புகள், மண் மாதிரிகளை எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி மானுடவியல் ஆய்வுகள், கரிம மாதிரிகள் ஆய்வுகள் செய்யப்பட்டு கால கட்டம் என்னவாக இருக்கும் என ஆய்வு நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மிக முக்கிய வரலாற்று தடயமாக உள்ளது. இங்கு நடைபெறும் அகழாய்வு மூலம் தமிழகத்தின் பழங்கால வாழ்க்கையில் சிவகளை மிக முக்கிய அத்தியாயத்தை எழுதும் என தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, ”சிவகளையில் நடைபெறும் ஆய்வு தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு பெற்ற ஆய்வாகும். கீழடி ஆய்வுகள் எப்படி வைகை நதி நாகரிகம் தமிழர் பண்பாட்டினை 2200 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுத்து காட்டும் வகையில் உள்ளதோ, அதைப்போல பொருநை நதிக்கரை நாகரிகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் சிவகளை அகழாய்வு அமைந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கருப்பு, சிகப்பு மண்பாண்டங்கள், இரும்பிலான குறு வாள்கள், தமிழ் எழுத்துகள் அடங்கிய ஓடுகள், சுடு மண் சிற்பங்கள், சீன செப்பு காசுகள் என பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் வெள்ளை பெயிண்டிலான குறியீடு செய்யப்பட்ட பானைகள், கிண்ணங்களும் கிடைத்துள்ளன. இதை பார்க்கும்போது சிவகளையில் இருந்த மனித இனத்தின் நாகரிகம் மிக தொன்மையான நாகரிகமாகவே இருக்க முடியும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறையின் மூலம் வெளியிட்டுள்ள அளவீட்டின்படி கி.மு.650-க்கும் கி.மு.850-க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். சிவகளை அதற்கு முன்னதாக உள்ள காலகட்டமாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் உள்ளது. அதன் காலகட்டத்தை நிர்ணயிக்க கூடிய பணிகளை தொல்லியல் துறை செய்து வருகிறது” என்றார்
”இரும்பு காலத்தின் துவக்கத்தில் இந்த பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். இங்கு கிடைத்துள்ள நெல் மணிகள் முக்கிய கண்டுபிடிப்பாகும். இதை உள்ளடக்கிய சிவகளை தாமிரபரணி பொருநை நதியின் நாகரிகத்துக்கு ஒரு அடையாளமாகும். இந்த பகுதியில் சிவகளை, பேட்மாநகரம், ஶ்ரீமூலக்கரை ஆகிய பகுதியில் ஈமதாழிகள் இருக்கக்கூடிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பராக்கிரமபாண்டி திரடு, வெள்ளை திரடு, செக்கடி, ஆவாரங்காடு போன்ற பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதி வாழ்விடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சிவகளை பகுதியில் ஒரே குழியில் அதிகமான தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தாழிகளின் மூடிகளை திறந்து உள்ளே இருக்ககூடிய பொருள்கள், எலும்புகள், மண் மாதிரிகளை எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி மானுடவியல் ஆய்வுகள், கரிம மாதிரிகள் ஆய்வுகள் செய்யப்பட்டு கால கட்டம் என்னவாக இருக்கும் என ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்
”ஒட்டுமொத்தத்தில் சிவகளை மிக முக்கிய வரலாற்று அடையாளமாக திகழ்கிறது. அகழாய்வு முடிந்து அறிக்கைகள் வரும்போது தமிழகத்தின் பழங்கால வாழ்க்கையில் சிவகளை ஒரு முக்கிய அத்தியாயத்தை எழுதும் என்பது உறுதி. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மேம்படுத்தி, உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து நமது பொருநை நாகரிகத்தை அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை இங்கே காட்சிப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
உலகம்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion