DMK - NEET: நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்த திமுக..!
நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டிப்பதாக, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.
நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டிப்பதாக, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.
அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகர் அவர்களின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது – யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது.
இந்த மரணங்கள் அனைத்திற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் – அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் – நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.
“நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்”என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த திரு.அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார். இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் ராமசாமி அவர்களின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது-அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது.
நீட் விலக்கிற்காக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அ.தி.மு.க. அடிமைகள் மறைத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழ்நாட்டுக்கே தெரியவந்தது.
இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அடிமைகளுக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிற இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது. கழகத்தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மே 2021-ல் கழக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வுபெற்ற நீதியரசர்
ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல்வேறு தருணங்களில் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 27 -ஆம் தேதியன்று, முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார். முதலமைச்சர் அவர்களின் தொடர் அழுத்தம் - பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம் - பொதுமக்கள் - மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.
மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் அவர்கள், நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார். இப்படி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை நம் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வருகிற போதும், முதலமைச்சர் அவர்கள் டெல்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவதுதான். கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடி அவர்களை டெல்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித்தார்கள். அப்போதுகூட, பிரதமர் அவர்களிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்கள். இப்படித் தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது.
இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது. முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் – இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.