Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்து என்ன?
தஞ்சை பள்ளியில் மதம் மாற்றம் இருந்ததா என்பது தொடர்பாக பள்ளி இருக்கும் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேட்டியளித்துள்ளனர்.
அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய தற்கொலை பின் உள்ள காரணத்தை முழுமையாக அரசு கண்டறிய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் நேற்று அந்த மாணவியின் சொந்த ஊருக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் அந்த மாணவியின் இறப்பிற்கு பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் அளித்தார். அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவரகள் தவறு செய்துள்ளனர். இதை அந்த மாணவியின் வீடியோ மற்றும் அந்த ஊர் மக்களின் பேச்சு ஆகியவற்றை கேட்டபிறகு தான் பாஜக வலியுறுத்தி வருகிறது” எனக் கூறினார்.
இந்நிலையில் தஞ்சையில் அந்த தனியார் பள்ளி அமைந்துள்ள ஊர்ப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் ஒரு தனியார் யூடியூப் செனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், “அந்த ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “நான் இந்த ஊரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். இங்கு மதம் சார்ந்த எந்த ஒரு பிரச்னையையும் நான் சந்திக்கவில்லை. மேலும் அந்தப் பள்ளியில் அதிகளவில் இந்து குழந்தைகள் படித்து வருகின்றனர் எனக் கூறினார். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் குருமூர்த்தி, “அந்தப் பள்ளியை பொறுத்தவரை மதம் மாற்றம் என்ற விஷயம் எதுவும் இல்லை. ஏனென்றால் என்னுடைய இரண்டு மகள்களும் அங்கு தான் படித்தனர். அவர்கள் படித்த போது அப்படி எந்த ஒரு பிரச்னையும் நடைபெறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்ற நபர், “இங்கு பல ஆண்டுகளாக இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவித மத வேறுபாடுகளும் இருந்ததில்லை. எங்களுடைய பண்டிகைக்கு அவர்கள் எங்களுடைய கோவிலுக்கு வருவார்கள். இந்துகள் பண்டிகைக்கு நாங்கள் அவர்களுடைய கோயிலுக்கு செல்வோம். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் இதை சிலர் மதம் சார்ந்த பிரச்னையாக மாற்றுகின்றனர். அந்த சிறுமி குடும்ப பிரச்னையால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.” இவ்வாறு பலரும் அந்த பள்ளி குறித்து அந்த வீடியோவில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்