தென்காசியில் கூவத்தூர் ஸ்டைல்: பதுக்கப்பட்ட 19 கவுன்சிலர்கள் 8 நாட்களுக்கு பின் வாக்களிக்க வரிசை கட்டினர்!
தமிழக அரசியலில் தேர்தல் பக்கத்தில் சில சுவாரஸ்ய பக்கங்கள் உண்டு. திருமங்கலம் ஃபார்முலா, ஆர்.கே.நகர் டோக்கன், கூவத்தூர் ரிசார்ட்.. இவையெல்லாம் ஒரு ட்ரேட்மார்க்.
தமிழக அரசியலில் தேதல் பக்கத்தில் சில சுவாரஸ்ய பக்கங்கள் உண்டு. திருமங்கலம் ஃபார்முலா, ஆர்.கே.நகர் டோக்கன், கூவத்தூர் ரிசார்ட்.. இவையெல்லாம் ஒரு ட்ரேட்மார்க். இவை நல்ல விஷயமாக இல்லாமல் இருந்தாலும் கூட தமிழக தேர்தல் அரசியலையும் இவற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கூவத்தூரில் ஒரு சொகுசு ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை தங்கவைத்த சசிகலா ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு சேரவிடாமல் பார்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அதன் பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பின் போது இதே போன்ற ஃபார்முலா கடைபிடிக்கப்பட்டது வேறு விஷயம்.
இப்போது நாம் இன்றைய டாப்பிக்குக்கு வருவோம்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் தலைவாரானார் திமுகவைச் சேர்ந்த எம்.திவ்யா. இவர் தொகுதிக்கு உட்பட்ட 19 கவுன்சிலர்களையும் கடந்த 13ஆம் தேதி முதல் குண்டாரில் ஒரு ரிசார்டில் தங்க வைத்திருந்தார். கவுன்சிலர்கள் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கொடைக்கானல், பழனி, குண்டாறு பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் இவர்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்பிருந்ததால் மற்ற கட்சியினரின் கண்ணில் படாமல் வைத்துள்ளார். ஆலங்குளத்தில் மொத்தம் 23 கவுன்சிலர்கள். திமுகவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகன் எழில்வண்ணன் சேர்மன் பதவியை பறிக்கக் கூடும் என்பதால் அத்தனை பேரையும் தனக்கு சாதகமாக வாக்களிக்க வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை திவ்யா வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அனைத்து கவுன்சிலர்களுடனும் 3 வாகனங்களில் வந்து சேர்ந்தார். கவுன்சிலர்கள் 8 நாட்களாக வீட்டில் இல்லாததால் சொந்த பந்தங்கள் அவர்களைக் காண ஆர்வத்துடன் குவிந்திருந்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மறைமுகத் தேர்தலில் திவ்யா சேர்மனாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தான் இந்த 19 கவுன்சிலர்களும் குடும்பத்தை சந்திக்கலாம் என்று திவ்யா தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனராம். ஆனால், திவ்யா தரப்பு இவற்றையெல்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது.
இதற்கிடையில் கடயம், கீழப்பாவூர், மேலநீதிநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிக்குளம், கடயநல்லூர், செங்கோட்டை, தென்காசி பஞ்ச்சாயத்து யூனியன் அலுவலகங்களில் கவுன்சிலர்களில் பதவியேற்புகள் ரொம்பவே சுமுகமாக நடந்தன.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்