தானியங்கி மது விற்பனை...பொய் செய்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை.. டாஸ்மாக் எச்சரிக்கை..!
"இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது"
தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானத்தை விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிரப்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது.
தானியங்கி மதுபான விற்பனை எதற்கு? டாஸ்மாக் விளக்கம்:
இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
"தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை"
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைக்கு உள்ளேயே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர, பொது மக்களால் அணுக முடியாது. இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, "இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த விடியா தி.மு.க அரசு" என குறிப்பிடப்பட்டுள்ளது.