12ம் வகுப்பு முடிவுகள் தயார் : முதல்வரின் அனுமதியோடு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் அனைத்து மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடந்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதற்காக கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக முதல்வருடன் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. இந்த முடிவுகளை வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினோம். ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, இது குறித்து மேலும் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் முடிவாக உள்ளது. ஆனால், எதிர்பார்க்காதவிதமாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக முதல்வர் தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்னும் ஓரிரு தினங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களிலும், பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களிலும் தொடங்கப்படுவது வழக்கம். இதனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் அவர்களது பள்ளி வருகை, செய்முறை மதிப்பெண், பள்ளிகளின் பருவத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கணக்கிட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 31க்கு பிறகு நடத்தப்படும் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.