'உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்...' ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!
தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்த சைலேந்திரபாபு இன்று தன்னுடைய ஓய்வு நாளில் உருக்கமான கடிதத்தை காவல்துறையினருக்கு எழுதியுள்ளார்.
தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்த சைலேந்திரபாபு இன்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் புதிய டி.ஜி.பி.யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது, " 30.06.2021 அன்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். இன்று பணி நிறைவு பெற்று உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். இரண்டாண்டு காலம் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம். குற்ற நிகழ்வுகளை தடுத்தோம். நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம். ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் விட்டு விடவில்லை.
பெருமையாக நினைக்கிறேன்:
தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற வழக்கமான சட்டம் & ஒழுங்கு நிகழ்வுகள் சுமூகமாக நடத்திச் சென்றோம். ஜனாதிபதி, பிரதம மந்திரி வருகைக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். தமிழ்நாட்டில் சாதி சண்டை இல்லை. மதக் கலவரம் இல்லை. இரவில் கொள்ளை, வங்கி கொள்ளை இல்லை. துப்பாக்கி கலாச்சாரம் இல்லை. பிற மாநில கொள்ளையர்கள் அட்டகாசம் இல்லை. உள்ளூர் ரவுடிகள் தொல்லை இல்லை. கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே, உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.
காவலர்களுக்கு 5 நாள்கள் பணி,ஆறாவது நாள் மிகை நேர ஊதியம். ஏழாவது நாள் ஓய்வு என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இரவு ரோந்துப்படி ரூ.300 முதல் முறையாக அல்லானது. காவலர் குடியிருப்பு அளவு 750 சதுர அடியாக உயர்ந்தது. மகளிர் காவலர்களின் வருகை 7 மணி என்பது 8 மணி என மாறியது. எரிபொருள் படி உயர்த்தப்பட்டது. காவலர் வாரிசுகளுக்கு பணி இட ஒதுக்கீடு பத்து சதவீதம் மீட்கப்பட்டது. 1340 மறைந்த காலவர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிலைய வரவேற்பு அதிகாரி வேலை, 1000 வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது.
பரிவுடன் நடந்து கொள்ள பயிற்சி:
4000 சிறு தண்டனைகளைக் களைந்து காவலர் நலன் காக்கப்பட்டது. காவலர்களை எனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டேன். 2,400 காவலர்களை எனது பயணத்தின் போது சந்தித்து குறைகளைக் கேட்டேன். துறை நமக்கு செய்தது போல் தாமும் துறைக்கு கைமாறு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நான் பணி ஓய்வுபெறும் இந்நாளின் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்.
பொதுமக்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க, உடல் நலம், மனநலம் காக்க கேண்டும். தொடர் கல்வி கற்க வேண்டும் . ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும்.
சரியான பாதையில் பயணிப்போம்:
வதந்திகளைக் கையாண்டது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது. கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்தது. தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன். இங்கொன்றும் அங்கொன்றும் நடந்தேறிய அசம்பாவிதங்களை நீங்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.பிரச்சனைகளை நீங்கள் வரவிடவில்லை.
பொதுமக்கள் தம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நம்மைப்பற்றிய விமர்சனம் பல வரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால் நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொண்டு நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம். உங்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்”. இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.