Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
Ration Card ekyc : ரேஷன் கார்டில் போலி நபர்களை நீக்கும் நடவடிக்கை தீவிரம் அடைந்து வரும் நிலையில், ரேஷன் கார்டில் கை விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் eKYC சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு பெயர் திருத்தம்
ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடையில் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டையில் பெயர்களை மாற்றம், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 08.08.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று
இந்த சிறப்பு முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் விரல் ரேகை பதிவு கட்டாயம்
இதே போல போலியான ரேஷன் கார்டுகளை நீக்க அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் eKYC சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் பயனாளிகளின் விரல் ரேகை இணைக்கப்பட்ட அனைத்து அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கை விரல் ரேகை பதிவு- சிறப்பு முகாம்
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு(eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















