"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
திமுக MLA மார்கண்டேயன் சமீபத்தில் கைதானபோது அவரின் மகன் செய்தியாளர்களிடம் பேசியதை பரிதாபங்கள் குழு இமிடேட் செய்து வெளியிட்ட வீடியோவுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், பரிதாபங்கள் குழு தற்போது மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன், சமீபத்தில் பொதுக்கூட்டமொன்றில் முதலமைச்சர் விஜய்யை ஒருமையிலும், அவதூறாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதன்காரணமாக, போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மார்கண்டேயன் தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரின் கைதுக்கு எதிராக திமுக தலைவர்கள் பலரும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், மார்கண்டேயனின் மகன் அக்ஷய், தனது தந்தை கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக செய்தியாளர்களிடம் முதல்வரை விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், பரிதாபங்கள் குழுவினர் தங்களின் யூடியூப் சேனலில் "ஆடி மாச பாவங்கள்" என்ற வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் கோபி சுதாகர், மார்க்கண்டேயன் மகனை இமிடேட் செய்திருந்தது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் TRB ராஜா, "தன் தந்தைக்கு எதிராக நடந்த ஒரு சட்டவிரோதச் செயலால் ஏற்பட்ட வேதனையை வெளிப்படுத்த முயன்ற ஒரு சிறுவனை பரிதாபங்கள் கையாண்டதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது.
இந்தத் திறமையான குழுவின் தீவிர ரசிகன் நான், ஆனால் ஒரு சிறுவன் வேதனையில் இருக்கும் நேரத்தில் அவரை அவர்கள் கையாண்டதைப் பார்க்க மிகவும் அருவருப்பாக இருக்கிறது. இதை அவர்கள் திருத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து பலரும் பரிதாபங்கள் குழுவினரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் பரிதாபங்கள் குழுவினர் இதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம்.
அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல" என்று பரிதாபங்கள் குழு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து TRB ராஜாவும், "பரிதாபங்கள் குழு அறிக்கை வெளியிட்டு சம்பத்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது. அவர்களின் செயல் நாகரிகமற்றதாக இருந்தபோதிலும், அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் காட்டிய எதிர்வினை முதிர்ச்சியானதாக உள்ளது. தவறைத் திருத்திக்கொண்டு, மன்னிப்பை வெளிப்படுத்திய அவர்களின் செயலை நாம் பாராட்ட வேண்டும்" என்று வரவேற்றுள்ளார்.
அதேவேளையில், திமுக ஆட்சியில் மார்க்கண்டேயன் மகனை போலீஸார் வாயைப் பொத்தி குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லும் விடியோவை பலரும் ஷேர் செய்து நீங்கள் செய்தது மட்டும் சரியா என்று திமுக-வை நோக்கி கேள்வியெழுப்பிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















