(Source: ECI/ABP News/ABP Majha)
Aavin Vs Amul: அமுல் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தமிழ்நாடு அரசு.. கடிதம் எழுதிய முதலமைச்சர்..என்ன காரணம்?
கர்நாடகாவில் அமுல் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனத்துக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அமுல் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனத்துக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் 47 ஆண்டுகால நிறுவனமான நந்தினியுடன் இணைந்து குஜராத்தின் பால் நிறுவனமான அமுல் செயல்படும் என்றும், இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது பால்வளத்துறையில் பல அதிசயங்கள் நிகழும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். நந்தினிக்கு எதிராக அமுல் நிறுவனம் கர்நாடகாவில் பால் விற்பனையில் இறங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான இந்த அறிவிப்பு பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரே நாடு ஒரே அமுல் திட்டத்தை கொண்டு வருவது தான் பாஜகவின் நோக்கம் என்று குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், அமுல் நிறுவனத்திற்கு எதிராக தமிழ்நாடும் போர்க்கொடி தூக்கியுள்ளது. அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அம்லு நிறுவனத்தின் எல்லை தாண்டிய கொள்முதல் வெண்மை புரட்சி கொள்கைக்கு எதிரானது என்றும், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் நுகர்வோருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை அமுல் நிறுவனம் நிறுவியுள்ளது குறித்தும்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, ட்திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத்திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்தி பகுதியை மீறாமல் தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அமுல் நிறுவனத்தின் எல்லை மீறிய கொள்முதல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இது ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல் பால் மற்றும் பால் பொருள்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்த்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டுமென்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.