TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
TN Railway Vande Metro: மத்திய அரசு பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

TN Railway Vande Metro: மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.ரூ.6,626 கோடி ஒதுக்கீடு:
நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ரயில்வே சேவையை மேம்படுத்த 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 320 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை கொண்டு தற்போது நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது போன்ற புதிய பணிகளை முன்னெடுக்கவும் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வந்தே மெட்ரோ ரயில் சேவை:
சென்னை - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் மற்றும் சென்னை - விழுப்புரம் ஆகிய, அதிக தேவையுள்ள 3 மார்கங்கள், வந்தே மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சாதகமான சூழல்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், பெட்டிகள் கைவசம் ஒப்படைக்கப்பட்ட உடன், வழித்தடம் இறுதி செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முற்றிலும் ஏசி வசதி கொண்ட 12 பெட்டிகள் அடங்கிய, வந்தே மெட்ரோ ரயிலானது சென்னை மற்றும் வாலாஜாபேட்டை இடையே சோதனை ஓட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இது முற்றிலும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறுகிய தூர வழித்தடங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில் சேவை, பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரை - எழும்பூர் வழித்தடம்:
சென்னை கடற்கரைக்கும் எழும்பூருக்கும் இடையிலான நான்காவது வழித்தட திட்டத்தை பொறுத்தவரை, இந்த திட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதை MRTS சேவைகளை மேம்படுத்தும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையான நிலத்தை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி தயங்குவதே தாமதத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.
22 புதிய ரயில் வழித்தடங்கள்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்களின்படி, “கடந்த 2014 முதல் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க ரயில்வே விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. மொத்தம் 1,303 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. இது இலங்கையின் முழு ரயில் வலையமைப்புக்கு நிகரானது. அதே நேரத்தில் 2,242 கி.மீ வழித்தடம் மின்மயமாக்கப்பட்டது. இது மாநிலத்தின் ரயில் மின்மயமாக்கல் இலக்கை 94% ஆக மேம்படுத்தியுள்ளது. தற்போது, 2,587 கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய 22 புதிய பாதைத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்த திட்டங்களுக்காக மொத்தம் 33,467 கோடி முதலீடு செய்யப்படுகிறது. கூடுதலாக, அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்த 2,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1896 கோடி ரூபாய் செலவில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேவைப்பட்டால் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் தடையற்ற முன்னேற்றத்தை உறுதி செய்யும்” என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.





















