CM Stalin Slams PM Modi: ”மோடி எதை எதையோ உளறிக்கொண்டிருக்கிறார்” - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
மோடி தான் பிரதமர் என்பதையே மறந்து எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறார் என, முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மோடி தான் பிரதமர் என்பதையே மறந்து எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறார் என, முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம்:
சென்னையில் நடைபெற்ற திராவிட எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் ஒரு கொள்கை குடும்பம். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம். வருகிற செப்டம்பர் 15ம் தேதி 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக - ஸ்டாலின்:
பாஜாக அறிவித்த ஏதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றியுள்ளதா? வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தது. ஆனால், 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை அதனை நிறைவேற்றவில்லை.
பிரதமரை விமர்சித்த முதலமைச்சர்:
எனவே, நமது திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாம் கவலைப்பட வேண்டாம். இம்மியளவும் பயப்படாமல் கொள்கை, லட்சியத்தை மனதில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பிரதமர் என்ற நிலையில் இருப்பதை மறந்து மோடி எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார். இந்திய நாட்டிற்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எண்ணத்தோடு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.