MK stalin Gifts Book: ’தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு..!
'முதல்வராக பதவியேற்றபோது தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் கொண்டுவரவேண்டாம், புத்தகங்கள் கொடுத்தால் போதும் என்று அறிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின், அதனை தானும் பின்பற்றி வருகிறார்’
தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பரிசளித்துள்ளார்.
காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். அதன்பிறகு, ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் கைகளில் பரிசு ஒன்றையும் அளித்தார்.
அந்த பரிசில் இரண்டு முக்கியமான புத்தகங்கள் இருந்தன. ஒன்று தமிழரின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகறிய வைத்த ‘கீழடி’ தொல்லியல் அகழாய்வுகள் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட ’KEELADI – AN URBAN SETTLEMENT OF SANGAM AGE ON THE BANKS OF RIVER VAIGAI’ என்ற புத்தகமும், இன்னொன்று, மெட்ராஸ் குறித்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முத்தையா உருவாக்கிய ‘Madras – Chennai’ A 400 year record of the first city of modern India என்ற நூலும்தான்.
முதலமைச்சராக பதவியேற்றபோது கூட தன்னை சந்திக்க வருபவர்கள் ‘பூங்கொத்துகள் கொண்டு வரவேண்டாம் ; புத்தகங்கள் கொடுங்கள் போதும்’ என்று அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின், அதனை பின்பற்றி அவரும் குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கியமான நபர்களை சந்தித்தபோதெல்லாம் தமிழர்களின், தமிழ் பண்பாட்டை விளக்கும் புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி, தற்போதும் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கும் மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களை பரிசாக அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்