`இது நடைமுறை தான்; அரசியல் இல்லை!’ - குடியரசு தின அணிவகுப்பு சர்ச்சைக்கு அண்ணாமலை பதில்!
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாததையடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாததையடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறும். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசைப் பல்வேறு கட்சியினரும், இயக்கத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். `எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களுடைய பொய்யான பரப்புரையின் மூலம் போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். குடியரசு தின விழாவும் நம் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் - உண்மை அறிவோம்!’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களுடைய பொய்யான பரப்புரையின் மூலம் போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
— K.Annamalai (@annamalai_k) January 17, 2022
குடியரசு தின விழாவும் நம் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் - உண்மை அறிவோம்!
The truth behind our state Tamil Nadu’s Tableau for the Republic Day Parade 2022! pic.twitter.com/XJE2EiKRji
அதில் அவர், `குடியரசு தின அலங்கார ஊர்திகளைப் பொருத்தவரையில், அது பாதுகாப்புத் துறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையின் அலுவல் அதிகாரிகள் இதனைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் எல்லா மாநிலங்களின் அலங்கார ஊர்தியும் இடம்பெறாது. தமிழ்நாட்டின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்கார ஊர்திகள் ஒப்புதல் அளிக்கப்பட்டன. அய்யனார், திருவள்ளுவர், மகாத்மா காந்தி முதலான கருப்பொருள்களின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்கார ஊர்திகள் தமிழ்நாடு சார்பில் இடம்பெற்றன. இந்த ஆண்டு தமிழ்நாடு இடம்பெறாவிட்டாலும், அடுத்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் எந்த அரசியலும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கூட இதில் இடம்பெறாமல் உள்ளன. எனவே இதில் எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியலுக்கு யாரும் இரையாக வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.