Tamilisai Soundararajan: "ஆந்திர முதலமைச்சரின் தங்கை கைது செய்யப்பட்ட விதம் கவலையளிக்கிறது.." ஆளுநர் தமிழிசை வேதனை..!
ஆந்திர முதலமைச்சரின் தங்கை கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஷர்மிளா, தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் நரசம்பேட்டா டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.வான சுதர்சன் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் டிஆர்எஸ் கட்சியினர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, ஷர்மிளாவின் பாத யாத்திரையை அவர்கள் பல இடங்களில் வழி மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜெகன்மோகன் தங்கை கைது:
ஷர்மிளா உபயோகப்படுத்திய கேரவன் வாகனம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும், மன்னிப்பு கேட்காமலேயே ஷர்மிளா பாத யாத்திரை மேற்கொண்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதிய காவல்துறையினர், ஷர்மிளாவை கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
#WATCH | Hyderabad: Police drags away the car of YSRTP Chief Sharmila Reddy with the help of a crane, even as she sits inside it for protesting against the Telangana CM KCR pic.twitter.com/ojWVPmUciW
— ANI (@ANI) November 29, 2022
காரோடு இழுத்துச்செல்லப்பட்ட ஷர்மிளா:
தொடர்ந்து வாரங்கலில் தனது பாத யாத்திரையை தொடங்க வேண்டி இருப்பதால், அவர் மீண்டும் காரில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் வீட்டை ஷர்மிளா முற்றுகையிட உள்ளதாக புரளி கிளம்பியது. இதனால், அவரை ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் போலீஸார் கைது செய்ய முயன்றனர். தான் வாரங்கல் செல்வதாக அவர் விளக்கமளித்தும், அதனை கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் கைது செய்து காரை கிரேன் உதவியுடன் இழுத்துச் சென்றனர்.
அப்போது ஷர்மிளா டிரைவிங் சீட்டிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் அவருடன் இருந்த மேலும் 5 பேர் மீதும் எஸ்ஆர் நகர்போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தனது மகள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் ஷர்மிளாவின் தாயார் விஜயலட்சுமி எஸ்ஆர் நகர் போலீஸ் நிலையத்திற்கு கிளம்பினார். ஆனால், அவரை வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே போலீஸார் வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ஷர்மிளா குற்றச்சாட்டு:
இதனிடையே ஜாமினில் வெளிவந்த ஷர்மிளா, பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சுயநலவாதிகள், லட்சியவாதிகளால் கேசிஆர் கட்சி நிரம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழல் மிக்க கட்சி என்றால் அது கேசிஆர் கட்சியும் அவரது அரசும் தான் எனவும், காலேஸ்வரம் திட்டம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் ஷர்மிளா, அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் கவலை:
இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும், ஆந்திராவின் மறைந்த முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் மகளுமான ஷர்மிளாவிற்கு நேர்ந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஷர்மிளா கைது செய்யப்பட்ட விதம் வேதனை அளிப்பதாகவும், அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நிலை குறித்து கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஷர்மிளா காரில் இருக்கும்போதே, அவரை கைது செய்தது தொடர்பான காட்சிகள் அவலை அளிப்பதாகவும் தமிழிசை சவுந்தராஜனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.